மாணவர்களுக்கு காய்ச்சலா? சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
பொள்ளாச்சி : மாணவ, மாணவியர் எவரேனும் காய்ச்சல் பாதிப்பால் தொடர் விடுமுறை எடுக்க முற்பட்டால், அந்த விபரத்தை சுகாதாரத்துறையினரிடம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கிடையே, பள்ளி மாணவர்கள் சிலருக்கு, 'மம்ப்ஸ்' எனப்படும் பொன்னுக்கு வீங்கி நோய் பாதிப்பு ஏற்படுவதாக ஆசிரியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் கூறியதாவது:'மம்ப்ஸ்' எனப்படும் வைரஸ் வாயிலாக பரவும் பொன்னுக்கு வீங்கி நோய், காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. பொன்னுக்கு வீங்கி பாதித்தவர்களின் இருமல், தும்மல், சளி, உமிழ்நீர் திவலைகள் வாயிலாக பிறருக்கு பரவும்.இதற்கென தனியாக தடுப்பு மருந்துகள் தேவையில்லை என்பதால், நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தாலே அந்த பாதிப்பு சரியாகிவிடும். இந்த நோய் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.மேலும், பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு காய்ச்சல் ஏற்பட்டு தொடர் விடுமுறையில் இருந்தால், சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பின், அந்த பள்ளியில் ஒரு வாரம் முதல் இரண்டு வாரம் வரை சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு மேற்கொள்வர்.இவ்வாறு, கூறினார்.