உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாத்திரை, உணவு முறையில் கவனம் :நீரிழிவு நோயாளிகளுக்கு டாக்டர் அறிவுரை

 மாத்திரை, உணவு முறையில் கவனம் :நீரிழிவு நோயாளிகளுக்கு டாக்டர் அறிவுரை

கோவை: நீரிழிவு நோயாளிகள் மருந்து, மாத்திரை மற்றும் உணவுமுறையை மருத்துவர் கூறியபடி பின்பற்ற தவறுவதால், பல்வேறு ஆரோக்கிய அபாய பாதிப்புகள் ஏற்படுவதாக கோவை ராம்நகர் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனை நிறுவனர்-தலைவர் டாக்டர் பாலமுருகன் எச்சரித்துள்ளார். உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு அவர் கூறியதாவது: இந்தியாவின் நீரிழிவு நிலைமை தற்போது அபாய எச்சரிக்கையாக உள்ளது. நாட்டில் 101 மில்லியன் மக்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இது மக்கள் தொகையின் 11.4 சதவீதமாகும். மேலும், 136 மில்லியன் பேர் முன்நீரிழிவு நிலையில் உள்ளனர். வருங்காலத்தில் நீரிழிவு அபாயம் வேகமாக உயரும். வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு, உடல் பருமன், மன அழுத்தம், மரபணு போன்றவை நீரிழிவு அதிகரிக்க காரணமாக உள்ளன. இன்றைய நிலையில் ஒவ்வொரு இரண்டு இந்தியர்களில் ஒருவருக்கு அதிக ரத்தச் சர்க்கரை உள்ளது. நீரிழிவு மிகவும் ஆபத்தான வகையில் இளம் வயதினரிடமும் விரைவாகப் பரவி வருகிறது. நீரிழிவு கட்டுப்பாட்டில் உணவுமுறையே முதன்மையான ஆயுதம். மருந்து, மாத்திரை அல்லது இன்சுலின் தவிர்த்தால், இதய நோய், சிறுநீரக செயலிழப்பு, கண் கோளாறு, நரம்பு பாதிப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். கோவை ராம்நகர் நீரிழிவு சிறப்பு மையம் சார்பில் நவம்பர் 14 முதல் டிசம்பர் 13 வரை நீரிழிவு, கண், சிறுநீரகம், நரம்பு மற்றும் எலும்பு நோய்களுக்கு 50 சதவீத சலுகையுடன் முதுநிலை சுகாதார பரிசோதனை மற்றும் இலவச ஆலோசனை முகாம் நடைபெறும். மேலும் காலை 7:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை உணவியல் கண்காட்சியும் நடைபெறும்.பொதுமக்கள் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி