பள்ளி கல்வி தகவல் மையம் இருப்பது யாருக்காவது தெரியுமா? விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் வேடிக்கை
கோவை ; 'பள்ளி கல்வி தகவல் மையம்' மற்றும் 'சைல்டு லைன்' குறித்த விழிப்புணர்வு இல்லாததால், மன நலம், பாலியல் சீண்டல் சார்ந்த விஷயங்களில் தீர்வு பெறமுடியாமல், அரசுப் பள்ளி மாணவ மாணவியர் பாதிக்கப்படுகின்றனர்.தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், 2018ம் ஆண்டு மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்தும், மன நல ஆலோசனைகள் வழங்கும் விதமாகவும், பள்ளி கல்வி தகவல் மையம் அமைக்கப்பட்டு, 14417 என்ற கட்டணமில்லா உதவி அழைப்பு எண் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு, பள்ளிக் கல்வித்துறை சார்ந்த திட்டங்கள், தகவல்கள், மனநல ஆலோசனை உள்ளிட்ட உதவிகளை பெறலாம். மாணவர், பெற்றோர், ஆசிரியர்கள், பொது மக்கள் என ஒவ்வொருவரும், தொடர்பு கொள்ளும் வசதி உள்ளது.சமீபகாலமாக, பாலியல் சீண்டல்களில் ஆசிரியர்கள் ஈடுபடுவதாக, குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. 1098 'சைல்டு லைன்' எண்ணிலும் தொடர்பு கொண்டு மாணவியர், பெற்றோர் புகார் அளித்து வருகின்றனர்.அதேசமயம், அரசின் பள்ளி கல்வி தகவல் மையம் குறித்த விழிப்புணர்வு, மாணவ மாணவியரிடம் குறைவாகவே உள்ளதாக, குறிப்பாக பெண் ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.மாநிலத்தில் தனியார், அரசு உதவிபெறும் பள்ளிகளை காட்டிலும், அரசுப் பள்ளிகளில் பாலியல் சீண்டல் புகார்கள் அதிகரித்து வருகின்றன. ஆகவே, போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேர்வு சமயத்திலும்!
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், '14417 கட்டணமில்லா எண் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லை. பள்ளி அறிவிப்பு பலகை, பிளக்ஸ் போர்டு, துண்டு பிரசுரங்கள் வாயிலாக விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். பொதுத் தேர்வு சமயத்தில், கல்வி சார்ந்த தகவல்கள் பெறவும் இது உதவியாக இருக்கும்' என்றனர்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியிடம் கேட்டபோது, ''உதவி அழைப்பு எண் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,'' என்றார்.