உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கால்நடைகளுக்கு அதிக பொங்கல் கொடுக்காதீர்! நரம்பு மண்டலத்தை பாதிக்கும்; டாக்டர்கள் எச்சரிக்கை

கால்நடைகளுக்கு அதிக பொங்கல் கொடுக்காதீர்! நரம்பு மண்டலத்தை பாதிக்கும்; டாக்டர்கள் எச்சரிக்கை

கோவை; மாட்டு பொங்கல் இன்று கொண்டாடப்படும் நிலையில், அளவுக்கு அதிகமாக பொங்கல் உணவளித்தால், கால்நடைகளுக்கு உயிரிழப்பு கூட ஏற்படும் என, கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. விவசாயத்துக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில், அதிகாலையிலேயே கால்நடைகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, 'ஜல் ஜல்' ஒலி எழுப்பும் சலங்கை, மணிகளால் அலங்கரித்து மேய்ச்சலுக்கு விவசாயிகள் அனுப்புவர்.தொடர்ந்து, மாட்டு கொட்டகையில் பட்டி பெருக பொங்கல் இடுவர். பொங்கல், அரிசி, கரும்பு, பழ வகைகளை ஒரு நாள் கவனிப்பு என்ற பெயரில், அளவுக்கு அதிகமாக வழங்குவதால், வயிற்று உப்புசம், நரம்பு மண்டல பாதிப்பு ஏற்பட்டு இறுதியில் உயிரிழப்புகூட ஏற்படும் வாய்ப்புள்ளதாக, கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது:பழ வகைகளால் எந்த பாதிப்பும் இருக்காது. கரும்பில் சர்க்கரை அதிகம் உள்ளது. இதை சாப்பிடும் கால்நடைகள், இரு நாட்கள் மந்தமாகவே இருக்கும். முழு கரும்பாக கொடுக்காமல், சக்கையாக சாப்பிட கொடுக்கலாம்.பொங்கல், அரிசி உள்ளிட்டவற்றை அளவுக்கு அதிகமாக தரக்கூடாது; ஒரு கையளவு உருண்டை தரலாம். அதிகமாக சாப்பிட்டால், கால்நடைகளின் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரித்து, நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.இறுதியில், வயிறு உப்புசம் ஏற்பட்டு உயிரிழப்புக்கூட ஏற்படலாம். மீதமிருக்கும் பொங்கலை மறுநாள் வழங்குவதையும் தவிர்க்க வேண்டும். மாட்டுப்பொங்கலாயிற்றே... இன்று நன்றாக சாப்பிடட்டும் என்று அளவுக்கு அதிகமாக, உணவளிப்பதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதோ முதலுதவி சிகிச்சை!

அதிக உணவால் கால்நடைகளுக்கு வயிறு உப்புசம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால், 15 கிராம் பெருங்காயத்தை, அரை லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீரில் கரைத்து தரலாம். அல்லது 100-150 கிராம் சமையல் சோடாவில் சிறிதளவு தண்ணீர் தெளித்து, கால்நடைகளுக்கு ஊட்ட வேண்டும். கால்நடைகளின் நிலைமை மோசமாகும் வரை காத்திருக்காமல், உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி