வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம்; முதல்வரின் தாயுமானவர் திட்டம் துவக்கம்
- நிருபர் குழு -முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்துக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும், தாயுமானவர் திட்டத்தை சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், முதல்வரின் தாயுமானவர் திட்ட துவக்க விழா நடந்தது. நகர பொறுப்பாளர்கள் நவநீதகிருஷ்ணன், அமுதபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி, பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார். நகராட்சி துணை தலைவர் கவுதமன், துணை செயலாளர் தர்மராஜ் மற்றும் நிர்வாகிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். குடிமங்கலம் 'வீடு தேடி வரும் ரேஷன்' திட்ட துவக்க விழா, குடிமங்கலம் ஒன்றியம் புதுப்பாளையம் கிராமத்தில் நடந்தது. தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள், முதியவர்களின் வீடுகளுக்கே சென்று, ரேஷன் பொருட்கள் வினியோகப்படுகிறது. அக்கிராமத்தை சேர்ந்த, மாற்றுத்திறனாளி மற்றும் முதியவர்களுக்கு ரேஷன் பொருட்கள், வீட்டிலேயே வினியோகித்தனர். நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முரளி, அடிவள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலர்கள், ரேஷன்கடை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வால்பாறை வால்பாறை தாலுகாவில் மொத்தம், 15,250 ரேஷன் கார்டுகளுக்கு, 42 ரேஷன் கடைகள் வாயிலாக மாதம் தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்கு ரேஷன் பொருட்கள் நேரில் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறாளிகள் வீடுகளை கண்டறிந்து அவர்களுக்கு, நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. கூட்டுறவு சார் பதிவாளர் அரவிந்குமார் கூறுகையில், ''வால்பாறை தாலுகாவில் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 1,063 பயனாளிகள் உள்ளனர். அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கே நேரடியாக சென்று, ரேஷன் கடை பணியாளர்கள், அத்தியாவசியப்பொருட்கள் வழங்கினர். எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் பொருட்களை பயனாளிகளுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.