உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்ய வேண்டியதும், கூடாததும்; அரசு மருத்துவமனை டீன் அறிவுரை

குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்ய வேண்டியதும், கூடாததும்; அரசு மருத்துவமனை டீன் அறிவுரை

கோவை; 'வீட்டில் உள்ள சின்ன குழந்தைகள் இயல்பாக கிடைக்கும் பொருட்களை எடுத்து, வாயில் போட்டுக் கொள்ளும் பழக்கம் இருப்பதால், பெற்றோர் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். அலட்சியமாக இருந்தால், குழந்தைகளின் இறப்புக்கு காரணமாகி விடும்' என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில், பெற்றோர் வேலைக்குச் சென்றாலும் சரி; வீட்டிலேயே இருந்தாலும் சரி; குழந்தைகளை கையாள்வது மிகவும் சவாலான காரியம். சில்லரை காசு, சிறிய பொம்மை, பின்னுாசி போன்றவற்றை வாயில் போட்டுக் கொள்வது, தண்ணீர் நிரப்பியுள்ள இடங்களில் விளையாடுவது, பெரியவர்களின் மாத்திரையை சாப்பிடுவது போன்ற நிகழ்வுகள் நடந்து விடுகின்றன. வீடுகளில் உள்ள பெற்றோர், கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். கோவையில், நேற்று முன்தினம், குழந்தையின் மூச்சுக்குழாயில் மிட்டாய் அடைத்தது; கடும் சிரமத்துக்கு பின் போராடி அகற்றப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று உடல் நிலை சரியில்லாத நான்கு வயது குழந்தைக்கு, மாத்திரை கொடுத்தபோது, மூச்சுக்குழாயில் சிக்கியதால், பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து, அரசு மருத்துவமனை டீன் கீதாஞ்சலி கூறியதாவது: குழந்தைகள் உள்ள வீடுகளில், பெற்றோர் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். எது கிடைத்தாலும் வாயில் போடும் பழக்கம், சில குழந்தைகளிடம் இருக்கும். சிறிய பொருட்கள், பெரியவர்கள் பயன்படுத்தும் மாத்திரைகள், எலி, கரப்பான் பூச்சிக்கு பயன்படுத்தும் மருந்துகளை, எட்டாத இடத்தில் வைக்க வேண்டும். தொண்டையை அடைக்கக் கூடிய, பெரிய மிட்டாய் போன்ற பொருட்களை கொடுக்கும்போது, கவனமாக இருக்க வேண்டும். அண்டா, வாளி போன்ற குழந்தைகளின் உயரம், அதற்கு குறைவான உயரம் கொண்ட பொருட்களில், தண்ணீர் நிரப்பி இருந்தால், பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். மின்சாரம் சார்ந்த பொருட்கள், ஸ்விட்ச் போன்றவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற விபத்துக்களில் சிக்கும் குழந்தைகள், சிகிச்சைக்கு வருவதை காண்கிறோம். எச்சரிக்கையாக இருந்தால், விபத்துக்களை தவிர்க்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை