உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அபார்ட்மென்ட் மக்களுக்கு டபுள் குப்பை வரி! மாநகராட்சி மீது அதிருப்தி

அபார்ட்மென்ட் மக்களுக்கு டபுள் குப்பை வரி! மாநகராட்சி மீது அதிருப்தி

கோவை;கோவையில், அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்போரிடம், இரண்டு விதமாக குப்பை வரி வசூலிக்கப்படுகிறது. அதனால், மாநகராட்சி நிர்வாகம் மீது குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.கோவை நகர் பகுதியில் வசிப்போரிடம், சொத்து வரியுடன் குப்பை வரியும் சேர்த்து மாநகராட்சி வசூலிக்கிறது. வீடுகளில் வசிப்போருக்கு மாதந்தோறும் ரூ.10 வீதம் ஆறு மாதத்துக்கு ரூ.60 வீதம் ஆண்டுக்கு இருமுறை என மொத்தம், 120 ரூபாய் வசூலிக்கிறது.கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு இக்கட்டணம் மாறுபடுகிறது. அதேபோல், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கு மாதந்தோறும் ரூ.30 வீதம் ஆறு மாதத்துக்கு ரூ.180 வீதம் ஆண்டுக்கு இரு முறை என, 360 ரூபாய் குப்பை வரி வசூலிக்கிறது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக குப்பை சேகரிப்பதில்லை.மாறாக, 100 கிலோவுக்கு மேலாக குப்பை உருவாக்குவோர் எனக்கூறி, தனியார் கழிவு மேலாண்மை நிறுவனத்தினரை நியமித்து, அகற்றிக் கொள்ள வேண்டும்.இக்குடியிருப்புகளில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரும், அந்நிறுவனத்தினருக்கு மாதந்தோறும் ரூ.80 முதல் ரூ.180 வரை கட்டணம் செலுத்துகின்றனர்.இதுதொடர்பாக, கோவை அபார்ட்மென்ட் அசோசியேசன் கூட்டமைப்பினர், மாநகராட்சி அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும், நிரந்தர தீர்வு கிடைக்காமல் தவிக்கின்றனர்.கோவை அபார்ட்மென்ட் அசோசியேசன் கூட்டமைப்பு செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது:கோவை மாநகராட்சி எல்லைக்குள், பெரியது, சிறியதுமாக, 1,000 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. உத்தேசமாக, ஒரு லட்சம் வீடுகள் இருக்குமென கணக்கிடப்பட்டு உள்ளது.திடக்கழிவு மேலாண்மை விதிகளை சுட்டிக்காட்டி, 100 கிலோவுக்கு அதிகமாக குப்பை உருவாக்குவோர் என பட்டியலிட்டு, அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பை சேகரிப்பதை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்தி விட்டது.தனியார் வாயிலாக கழிவு மேலாண்மை செய்ய, நிர்ப்பந்திக்கப்பட்டு இருக்கிறோம். 'பல்க் வேஸ்ட் ஜெனரேட்டர்' என்ற பட்டியலில் ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள், லாட்ஜ்கள் போன்றவற்றை, வணிக ரீதியாக சேர்க்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பை அதிகமாக உருவாகிறதே தவிர, வணிக நோக்கமாக கருதக்கூடாது.தற்போது சொத்து வரியுடன் சேர்த்து, குப்பை வரி வசூலிக்கப்படுகிறது. தனியார் நிறுவனத்துக்கும் குப்பை அள்ள மாதந் தோறும் கட்டணம் செலுத்துகிறோம். இதற்கு தீர்வு காண, மாநகராட்சியே நேரடியாக குப்பையை சேகரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

'பரிசீலித்து நடவடிக்கை'

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போரிடம் குப்பை வரி வசூலிப்பது தொடர்பாக, பிரத்யேகமாக அந்தந்த குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் மனு கொடுத்தால், பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ