25 ஆண்டுகளாக வஞ்சிக்கும் திராவிட கட்சிகள்! பொள்ளாச்சி மாவட்டத்துக்கு குரல் கொடுக்கும் பா.ஜ.,
பொள்ளாச்சி : 'பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டமாக உருவாக்க வேண்டும்,' என பா.ஜ.,வினர் வலியுறுத்தினர்.பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு, உடுமலை, மடத்துக்குளம், ஆனைமலை, வால்பாறை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகாகளை உள்ளடக்கி மாவட்டம் உருவாக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில், பொள்ளாச்சி நகர பா.ஜ., தலைவர் பரமகுரு மற்றும் நிர்வாகிகள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது: நாட்டின் மொத்த தென்னை நார் ஏற்றுமதியில், 50 சதவீதம் பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது. தென்னை நார் பொருட்களுக்கான ஏற்றுமதி சிறந்த நகரம் என அந்தஸ்து பெற்றுள்ளது.தமிழகத்தில், கடந்த, ஆறு ஆண்டுகளில் ஆறு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த, 13 ஆண்டுகளாக கொங்கு மண்டலத்தில் ஒரு புதிய மாவட்டம் கூட உருவாகவில்லை.மலைப்பகுதியான வால்பாறை அருகே உள்ள சோலையாறு பகுதியில் இருந்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று வர, 260 கி.மீ., பயணம் செய்ய வேண்டும்.இந்நிலையில், உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியை சேர்த்து பழநி மாவட்டம் உருவாகுவதாக தகவல்கள் பரவுகின்றன.உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளை பழநியுடன் சேர்க்க கூடாது.பி.ஏ.பி., பாசனத்தில், ஆண்டுக்கு, 90 நாள் பாசன நீர் வழங்க வேண்டும். தற்போது, இரண்டு ஆண்டுக்கு, ஒரு முறை மட்டும் சில நாட்களுக்கு பாசன நீர் கிடைக்கிறது.உடுமலை, மடத்துக்குளம் சேர்த்து பழநி மாவட்டம் உருவாக்கிய பின், பி.ஏ.பி., பாசன நீரை ஒட்டன்சத்திரம் கொண்டு செல்லப்படும் என தகவல் வருகிறது. இவ்வாறு நடந்தால், பாசன நீரை நம்பியுள்ள, நான்கு லட்சம் ஏக்கர் நிலமும் தரிசாக மாறும். குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.பி.ஏ.பி., பாசன நீரை ஒட்டன்சத்திரம் வரை கொண்டு செல்ல முற்படும் அமைச்சர் சக்கரபாணி, எம்.பி., ஈஸ்வரசாமி ஆகியோர், ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை.கடந்த, 25 ஆண்டுகளாக பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்காமல் தாமதம் செய்யும் திராவிட கட்சிகளாலும், ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதாலும் மக்கள் வஞ்சிக்கப்படுகின்றனர்.எனவே, பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.