உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாதியில் முடியும் ஓட்டுனர்களின் பயணம்! மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்துவதால் ஆபத்து

பாதியில் முடியும் ஓட்டுனர்களின் பயணம்! மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்துவதால் ஆபத்து

கோவை; டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் என்கின்றனர் டாக்டர்கள்.சமீபகாலமாக பஸ் டிரைவர்களுக்கு, மாரடைப்பு ஏற்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. பெரும்பாலான டிரைவர்கள், கண்டக்டர்கள் உடல்நலம் குறித்து கவலைப்படுவதில்லை. இதன் காரணமாக பணியின் போது, மாரடைப்பு ஏற்படுகிறது.வரும் காலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க, உடல்நலப் பிரச்னை உள்ள டிரைவர்கள், கண்டக்டர்களை மருத்துவ சிகிச்சைக்கு கட்டாயப்படுத்தி, அதற்கான ஆதாரங்களை காட்டினால் மட்டுமே, பணியை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட ஓட்டுனர் மட்டுமின்றி, பயணிகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.அரசு போக்குவரத்துக் கழக அலுவலர் ஒருவர் கூறியதாவது: அரசு மருத்துவமனைகள் மூலம், டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு தேவையான கண் பரிசோதனை, முழு உடல் பரிசோதனைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது. சிறப்பு பயிற்சிகள் நடத்தும் போது, அவர்களுக்கு தேவையான கவுன்சிலிங்கும் வழங்கப்படுகிறது.அரசு போக்குவரத்துக்கழக கிளை அலுவலகங்களில் நடத்தப்படும் மருத்துவ முகாம்களில், நோய் அறிகுறிகள் குறித்து கண்டறிந்து தெரிவிக்கப்படுகிறது. ஆனால், டிரைவர்கள், கண்டக்டர்கள் அதன் பின் தொடர் சிகிச்சைக்கு செல்வதில்லை. பணி பாதிக்கும் என கருதி, வெளியிலும் சொல்வதில்லை. டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அரசு இன்சூரன்ஸ் உள்ளது. அதன் மூலம் அவர்கள் தேவையான சிகிச்சை பெறலாம். இவ்வாறு, அவர் கூறினார்.அரசு போக்குவரத்துக்கழக தொ.மு.ச., கோவை மண்டல பொதுச்செயலாளர் பெரியசாமி கூறுகையில், ''வாகனங்கள் பெருகிவிட்டன. சாலை விரிவாக்கம் இல்லை. பொதுப்போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை. இதுதவிர, பணி பளு ஆகியவற்றால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால்தான் பாதிப்பு ஏற்படுகிறது. டிரைவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

மாரடைப்பு ஏற்படுவதில்லை'

கோவை அரசு மருத்துவமனை இருதயவியல் துறை தலைவர் நம்பிராஜன் கூறுகையில், ''கனரக வாகனங்கள் ஓட்டுவதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அவர்களுக்கு ஏதாவது ஒரு நோய் இருந்திருக்கலாம். அதற்கு அவர்கள் முறையான பரிசோதனை, சிகிச்சை பெறாமல் இருந்திருப்பர். அதனால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கும்.சிலருக்கு பிறவியிலேயே அல்லது மரபு வழியாகவோ, இருதய பிரச்னைகள் இருக்கும். அவர்களுக்கு திடீர் மாரடைப்பு ஏற்படலாம். அதேபோல், ஒரு சிலருக்கு இருதய தசைகள் பலவீனமாக இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கும். குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது அவசியம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

aaruthirumalai
மே 31, 2025 11:23

நாட்டுல வெப்ப நிலை மாறிவிட்டது. அனைத்து பேருந்துகளிலும் டிரைவர் கேபின் குளிர்சாதன வசதி செய்துதர வேண்டும். பேருந்து நிலையங்களில் சத்தான உணவு மற்றும் பழரசங்கள் சிறப்பு விலையில் தரவேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பணிமனைகளில் மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும்.


Padmasridharan
மே 31, 2025 11:03

இதய நோய் வந்திறந்தவர்கள் எல்லாம் கொரோனாவுக்கு தடுப்பூசி எடுத்தவர்களா. . கண்டுபுடியுங்க சாமி


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 31, 2025 10:46

நகர பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் முதல் நாள் மதியம் 12 மணிக்கு பேருந்தில் ஏறினால் மறுநாள் மதியம் 12 மணிக்கு பேருந்தில் இருந்து இறங்குகிறார்கள். இரவில் அலுவலகம் அல்லது கிடைத்த இடத்தில் ஓய்வு எடுக்கிறார்கள். இங்கு அவர்களுக்கு முறையான ஓய்வு கிடைப்பது இல்லை. ஆகவே பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் ஷிப்ட் நேர அளவை குறைத்து காலை 4 மணியிலிருந்து இரவு 10 மணிக்குள் ஷிப்ட் நேரம் வருமாறு குறைக்க வேண்டும். காலை ஷிப்ட் மாலை ஷிப்ட் மாறி மாறி கொடுக்க வேண்டும். அவர்கள் குடும்பத்தாருடன் உறங்கும் விதமாக அமைத்தல் நல்லது. முடியாவிட்டால் ஓய்வு அறை நன்கு பாரமரிக்கப்பட்டு வழங்க வேண்டும். வாரத்தில் இரு நாட்கள் கட்டாய விடுப்பு தர வேண்டும். ஒரு சில ஓட்டுனர் நடத்துனர்கள் மாதம் முழுவதும் தொடர்ச்சியாக வேலை செய்து மொத்தமாக 4 நாட்கள் விடுப்பு எடுத்து செல்வது உண்டு. இது போன்ற விடுப்பு முறை தொடர்ச்சியாக வேலை செய்வது முற்றிலும் தடை செய்ய வேண்டும்.


புதிய வீடியோ