ரவுண்டானாவில் ஓட்டுநர்கள் திணறல்; வழிகாட்டி, மின்விளக்கு அமைக்கணும்
வால்பாறை; வால்பாறை அருகே, ரவுண்டானாவில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு மாயமானதால், இரவு நேரத்தில் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறை அடுத்துள்ளது பழைய வால்பாறை எஸ்டேட். இங்கு, சோலையாறு அணை, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய மூன்று ரோடுகள் பிரிகின்றன.இந்த இடத்தில், சுற்றுலா பயணியர் வசதிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில், வழிகாட்டி பலகை வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த இடத்தில் ரவுண்டானா அமைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வழிகாட்டி பலகையை அகற்றினர். வழிகாட்டி பலகை இல்லாததால், சுற்றுலா வாகனங்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.அதே போல், இந்தப்பணிக்காக நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த உயர்கோபுர மின் விளக்கும் அகற்றபட்டன. இதனால், இரவு நேரத்தில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் இருளில் பயணிக்க முடியாமல் தவிக்கின்றனர்.வால்பாறை நகராட்சி கவுன்சிலர் கவிதாவிடம் கேட்டபோது, ''வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த, பழைய வால்பாறை பகுதியில் மூன்று ரோடுகள் சந்திக்கும் இடத்தில், நகராட்சி சார்பில் கடந்த ஆண்டு உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.தற்போது ரோடு விரிவாக்கத்திற்கு பின், ரவுண்டானா அமைக்கும் பணிக்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உயர்கோபுர மின்விளக்கை தற்காலிமாக அகற்றியுள்ளனர். பணி நிறைவடைந்த பின், உடனடியாக அதே இடத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.