உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வறட்சியில் மிரட்சி! வாய்க்காலில் கசியும் தண்ணீர்... விளைநிலங்களில் தேங்கி வீண்

வறட்சியில் மிரட்சி! வாய்க்காலில் கசியும் தண்ணீர்... விளைநிலங்களில் தேங்கி வீண்

சூலுார்: பி.ஏ.பி., வாய்க்கால் முறையாக பராமரிக்கப்படாததால், கசியும் தண்ணீர், விளைநிலங்களில் தேங்குவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.சூலுார் அடுத்த சுல்தான்பேட்டை பகுதியில் பி.ஏ.பி., வாய்க்கால் செல்கிறது. ஆடி மாதத்தில் சுல்தான்பேட்டை பகுதிக்கான தண்ணீர் வாய்க்காலில் திறந்து விடப்படும். அதை பயன்படுத்தி ஆடிப்பட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்து பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில், மற்ற பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும்போது, தங்கள் விளைநிலங்களில் வீணாக தண்ணீர் தேங்கி, பாதிப்பை ஏற்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது:பி.ஏ.பி., வாய்க்காலை ஒட்டி எங்கள் விவசாய நிலங்கள் உள்ளன. வாய்க்காலில் தண்ணீர் செல்வதால், எங்கள் கிணறுகள் நிரம்பி வழிகின்றன. கோடை காலத்துக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளது. இந்நிலையில், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தண்ணீர் தற்போது செல்கிறது. வாய்க்காலின் பக்கவாட்டு சுவர்களில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து, பல இடங்களில் விரிசல் விட்டுள்ளது. அதன் வழியாக தண்ணீர் வெளியேறி, எங்கள் விளைநிலங்களில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது. காய்கறி செடிகள் அழுகுகின்றன.பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாய்க்காலில் தேசமடைந்த பகுதிகளில் கள ஆய்வு செய்து, அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், தண்ணீர் திருப்பி விடும் ஷட்டர் பழுதடைந்துள்ளது. அதை முறையாக பராமரித்து, தண்ணீர் வீணாகாத வகையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.கோடைக்காலம் உச்சத்தில் உள்ளது. கடுமையான வெப்பம் மற்றும் வெயிலால், பல இடங்களிலும் தாவரங்கள் வாடி வருகின்றன. ஆனால், இங்கு பாசன தண்ணீர் வீணாகி விளை நிலங்களில் தேங்கி, அவற்றுக்கே தீங்கு இழைக்கும் விதத்தில் உள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி