மேலும் செய்திகள்
கரும்பு விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம்
02-Dec-2024
கோவை; கோவை, மத்திய கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் சார்பில் அறிமுகம் செய்யப்பட்ட 'கோ 14012' ரக கரும்பு குறித்து, முதல் நிலை செயல் விளக்கத்திடலில், வயல் தினவிழா நடந்தது.கோவையில் உள்ள மத்திய கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், புதிதாக அறிமுகம் செய்யும் கரும்பு ரகங்கள், தேர்ந்தெடுக்கப்படும் விவசாயிக்கு வழங்கப்பட்டு,முதல் நிலை செயல்விளக்கத்திடல் அமைக்கப்படுகிறது. இங்கு, அப்பகுதி விவசாயிகள் அந்த ரக கரும்பு வளரும் விதம் குறித்து நேரடியாக பார்த்து அறிந்து, அதன் அடிப்படையில், சாகுபடி செய்ய முன்வருகின்றனர்.கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட, 'கோ 14012' ரக கரும்புக்கானசெயல் விளக்கத் திடல், ஈரோடு, அந்தியூர் அடுத்த மாத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டது. இங்கு, ஆப்பக்கூடல் சக்தி சர்க்கை ஆலையோடு இணைந்து, வயல் தின விழா நடந்தது.நிகழ்ச்சியில் பேசிய, கரும்பு இனப்பெருக்க நிறுவன இயக்குநர் கோவிந்தராஜ், “தற்போதைய சூழலில் ஏக்கருக்கு 70 டன் மகசூல் கிடைத்தால்தான், கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். 'கோ 14012' ரகமானது, 2000ம் ஆண்டில் வெளியிடப்பட்ட 'கோ 86032' ரகத்திற்கு மாற்றாக இருக்கும்,” என்றார். தொடர்ந்து, 'கோ 14012' விதைக் கரணைகளை, பங்கேற்பாளர்களுக்கு வழங்கினார்.நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி புத்திர பிரதாப் பேசுகையில், 'கோ 14012' ரகம், வறட்சியைத் தாங்கக்கூடியது; பூக்காது. பூச்சி தாக்காத தன்மை கொண்டது,” என்றார். சக்தி சர்க்கரை ஆலை துணைத் தலைவர் திருவேங்கடம், அம்மாபேட்டை வேளாண் உதவி இயக்குனர் பவானி கரும்பு இனப்பெருக்கு நிறுவன விஞ்ஞானிகள், சக்தி சர்க்கரை ஆலை அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.
02-Dec-2024