மீண்டும் தலை துாக்கும் போதை பவுடர் கலாசாரம்! தொண்டாமுத்துாரில் வேண்டும் கண்காணிப்பு
தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் பகுதியில், மீண்டும் போதைப்பவுடர் புழக்கம் அதிகரித்து வருகிறது.கோவையின் மேற்கு புறநகர் பகுதியான தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில், விவசாயம் மற்றும் பாக்கு உற்பத்தி செய்யும் தொழில் பிரதானமாக உள்ளது. கடந்த, சில ஆண்டுகளுக்கு முன், பாக்கு உற்பத்தி செய்யும் தொழிலுக்காக, அசாம், ஒடிசா, பீஹாரில் இருந்து ஆயிரக்கணக்கான வடமாநிலத்தொழிலாளர்கள் இப்பகுதிக்கு வந்து, பாக்கு ஷெட் மற்றும் தனியார் வீடுகளில் வாடகைக்கு தங்கியிருந்து வருகின்றனர்.வடமாநில தொழிலாளர்களில் சிலர், சுயலாபத்திற்காக, வடமாநிலங்களில் இருந்து போதைப்பவுடர்களை குறைந்து விலைக்கு வாங்கி வந்து, சிறிய டப்பாக்களில் அடைத்து இங்குள்ள வடமாநில தொழிலாளர்களுக்கும், இப்பகுதியை சேர்ந்த இளைஞர்களும் விற்பனை செய்து வந்தனர்.இந்த போதைப் பவுடரை, தண்ணீரில் கலந்து, ஊசி வழியாக உடலில் ஏற்றி, போதை அனுபவிக்கின்றனர். கடந்த, 2 ஆண்டுகளில் மட்டும், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பவுடர்களை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.போலீசாரின் தொடர் சோதனை, வழக்குப்பதிவுகளால், தொண்டாமுத்தூர் பகுதிகளில், போதைப்பவுடர் விற்பனை நிறுத்தப்பட்டது.ஆனால், போலீசாரின் சோதனைகள் குறைந்ததால், தற்போது, மீண்டும் தொண்டாமுத்தூர் பகுதியில் வடமாநில போதைப்பவுடர் புழக்கம் அதிகரித்துள்ளது. போலீசார், உடனடியாக களமிறங்கி, போதைப்பவுடர் விற்பனையை தடுத்து, விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்ய வேண்டியது அவசியம்.ஒரு சிறிய டப்பாவில் அடைக்கப்பட்ட போதைப்பவுடர், 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த போதைப்பவுடரை வாங்கி, இளைஞர்கள் கூட்டாக பயன்படுத்துகின்றனர். ஒரே ஊசியை பலரும் பயன்படுத்துவதால், அவர்களுக்கு, எய்ட்ஸ் போன்ற நோய்களும் பரவ வாய்ப்புள்ளது.