வெடி சப்தத்தால் நில அதிர்வு; அச்சத்தில் உறைந்த மக்கள்
கிணத்துக்கடவு ; கிணத்துக்கடவு அருகே உள்ள கிராமங்களில், பயங்கர வெடி சப்தம் கேட்ட நிலையில், நில அதிர்வும் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட, 34 ஊராட்சிகளில் 42 கல்குவாரிகள் செயல்படுகின்றன. இந்நிலையில், நேற்று அதிகாலை, 3:00 மணி முதல் 6:00 மணி வரை, நெ.10.முத்தூர், பொட்டையாண்டிபுறம்பு உள்ளிட்ட ஊராட்சிகளில் அதிக வெடி சப்தம் கேட்டதுடன், நில அதிர்வும் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.மக்கள் கூறியதாவது:கடந்த சில ஆண்டுகளாக, கல்குவாரியில் இருந்து பலத்த வெடி சப்தம் கேட்பது தொடர்கிறது. இதனை, அரை கி.மீ., துாரத்தில் உள்ள மக்கள் உணர்கின்றனர். சில நேரங்களில், நில அதிர்வும் ஏற்படுகிறது.நேற்று அதிகாலை வழக்கத்துக்கு மாறாக, பயங்கர வெடி சப்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதால், காரணம் தெரியாமல் பலரும் அச்சமடைந்தனர். இந்த சப்தம், கல்குவாரி வெடிகளால் ஏற்பட்டது என்றால், பயன்படுத்தப்படும் வெடி பொருட்களின் அளவுகள், பூமியில் வெட்டப்பட்டிருக்கும் ஆழம் ஆகியவற்றை கண்காணித்து, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.இப்பகுதியில், நிலத்தடி நீர்மட்டம் ஏற்கனவே பாதித்துள்ளது. கால்நடை வளர்ப்பு அதிகமுள்ள நிலையில், விவசாய பரப்பை அரசு பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.