வால்பாறை - காடம்பாறை டவுன் பஸ் இயக்க வேண்டுமென இ.கம்யூ., மனு
வால்பாறை: திராவிட மாடல் ஆட்சியில், வால்பாறை அரசு பஸ்களில் மகளிர் பயணம் செய்ய முடியாமல் தவிப்பதாக இ.கம்யூ.,கட்சி குற்றம்சாட்டியுள்ளது.வால்பாறையில் கடந்த ஓராண்டாக, தமிழக அரசின் உத்தரவின் பேரில், அரசு பஸ்களில் மகளிர் இலவச பயணம் செய்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான எஸ்டேட் பகுதியில் அரசு பஸ்கள் 'மப்சல்' பஸ் எனக்காரணம் காட்டி, மகளிரிடம் கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால், கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இ.கம்யூ., கட்சியின் தாலுகா செயலாளர் மோகன், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:திராவிட மாடல் ஆட்சியில், தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் மகளிருக்கு கட்டணமில்லாத பஸ் பயணம் நடைமுறையில் உள்ளது. வால்பாறையில் உள்ள பெரும்பாலான எஸ்டேட் பகுதிகளுக்கு மகளிர் கட்டணம் இல்லாமல் பஸ்களில் பயணம் செய்கின்றனர்.ஆனால், 1வது வார்டில் உள்ள வேவர்லி எஸ்டேட், வாட்டர்பால்ஸ், அட்டகட்டி, காடம்பாறை பவர்ஹவுஸ் ஆகிய பகுதிகளை சேர்ந்த மகளிரும், மரப்பாலம், கருமுட்டி, வெள்ளிமுடி, காடம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின பகுதியை சேர்ந்த மகளிரும், அரசு பஸ்களில் கட்டணமில்லாமல் பயணம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.எனவே, கூலி வேலை செய்யும் மகளிர் மற்றும் பல்வேறு செட்டில்மெண்ட் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் நலன் கருதி, வால்பாறையில் இயக்கப்படும் அனைத்து அரசு பஸ்களில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.மேலும், வால்பாறையிலிருந்து, வாட்டர்பால்ஸ், அட்டகட்டி, காடம்பாறை வரை, காலை, மாலை நேரங்களில் அரசு பஸ்களை இயக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.