மேலும் செய்திகள்
'டயாபர்' நிறுவன அனுமதி ரத்து கோரி திரண்ட மக்கள்
08-Apr-2025
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், 'டயாலிசிஸ்' பிரிவு விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், தேசிய தரச்சான்று பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.உடலில் அதிகமான சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு போன்ற காரணங்களினால், சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்படும் நோயாளிகள், கோவை தனியார் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். பஸ் போக்குவரத்து, சிகிச்சை என அதிகளவு செலவாவதால், ஏழை மற்றும நடுத்தர மக்கள், 'டயாலிசிஸ்' சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர்.இந்நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 'டயாலிசிஸ்' பிரிவு பல ஆண்டுக்கு முன் துவங்கப்பட்டது. தற்போது, இந்த பிரிவு விரிவாக்கம் செய்யப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவு செயல்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.மாதத்துக்கு, 40 நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை பெறுகின்றனர். வாரத்துக்கு, இரண்டு முறை வீதம், மாதத்துக்கு எட்டு முறை 'டயாலிசிஸ்' செய்யப்படுகிறது.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா கூறியதாவது:சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிகள், 'டயாலிசிஸ்' செய்ய அதிக பணம் செலவிடும் நிலை உள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 'டயாலிசிஸ்' பிரிவு துவங்கப்பட்டது. இதில், சிகிச்சை முழுவதும் இலவசமாக அளிக்கப்படுகிறது.அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு போதுமான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ., தொகுதி நிதியில், 12 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு சுத்திகரிக்கப்பட்ட வாட்டர் பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது. தலா ஆயிரம் லிட்டர் கொண்ட இந்த டேங்க்கை பயன்படுத்தியே 'டயாலிசிஸ்' செய்யப்படுகிறது.நோயாளிகளுக்கு தேவைப்படும் நேரத்தில் ரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை செய்யப்படுகிறது. மருந்து, மாத்திரைகள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.தேசிய தரச்சான்று பெறுவதற்காக முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. தேசிய தரச்சான்று கிடைத்தால், ஒரு படுக்கைக்கு, 10 ஆயிரம் ரூபாய் வீதம், ஏழு படுக்கைக்கு, 70 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். அதை கொண்டு இங்கு தேவையான வசதிகளை மேம்படுத்தலாம்.இவ்வாறு, கூறினார்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, 'டயாலிசிஸ்' பிரிவுக்கு வரும் நோயாளிகள், கொழுப்பு நீக்கிய பால், அரிசி பதார்த்தங்கள், வெங்காயம், மோர், காய்கறி வகைகள் (புடலங்காய், சுரைக்காய், பூசணிக்காய், வெள்ளரிக்காய் துண்டு, பீர்க்கங்காய்), புளி, கோதுமை, முட்டை வெள்ளைக்கரு போன்றவை சாப்பிடலாம்.பழங்கள், பழச்சாறு, டீ, ஜாம், காபி, ஜெல்லி மற்றும் இனிப்பு வகைகள், குளிர்பானங்கள், கொத்துமல்லிக்கீரை, தக்காளி, ராகி மற்றும் அனைத்து கீரை வகைகள், சாக்லெட், பேக்கரி உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், உப்பு, உப்பிட்ட பதார்த்தங்கள் (அப்பளம், வடகம், சிப்ஸ், முறுக்கு, ஊறுகாய், கருவாடு) போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.மேலும், குறைவாக சாப்பிட வேண்டிய உணவுவகைகள் குறித்தும் நோயாளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்த டயாலிசிஸ் பிரிவில், சாப்பிடக்கூடிய உணவுகள், சாப்பிடக்கூடாதவைகள் குறித்து அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது, என, மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
08-Apr-2025