சலான் அனுப்பி முதியவரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி
கோவை: போக்குவரத்து விதிமீறல்களுக்கு போலீசார் அனுப்புவது போல் 'சலான்' அனுப்பி, முதியவரிடம் மோசடி செய்தவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.சரவணம்பட்டியை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவரின், 'வாட்ஸ் அப்' எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், முதியவர் போக்குவரத்து விதிமீறல்களை மீறியதாக தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அபராதம் செலுத்துவதற்கான செயலி 'ஏ.பி.கே.,' பைல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.போலீசார் அனுப்பிய அபராதம் குறித்த தகவல் என, நம்பிய முதியவர் செயலியை பதிவிறக்கம் செய்து, தனது வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்தார். இதையடுத்து, அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 50 ஆயிரம் பணம் மாயமானது. இது குறித்து, முதியவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். போலீசார் எச்சரிக்கை
சமீப காலமாக போலீசார் அனுப்புவது போல், போலி அபராத ரசீதை அனுப்பி பணம் பறிக்கும் மோசடி நடந்து வருகிறது. போலீசார் அபராத தொகையை வசூலிக்க, 'வாட்ஸ் அப்'ல் அனுப்ப மாட்டார்கள்.அபராதம் விதிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தால், 'பிளே' ஸ்டோரில் சென்று அரசின் 'எம் பரிவாகன்' செயலியை பதிவிறக்கம் செய்து பரிசோதித்து பார்க்கவும். 'வாட்ஸ் அப்' வாயிலாக அனுப்பப்படும் எந்த ஒரு செயலியையும், பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என, போலீசார் எச்சரிக்கின்றனர்.