மயக்க நிலையில் முதியவர் மீட்பு; தந்தையை கண்ட மகள் உருக்கம்
கோவை; வடகோவை ரயில்வே ஸ்டேஷனில், வழி தெரியாமல் மயங்கிய நிலையில் தவித்து கொண்டிருந்த முதியவரை, ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர் மீட்டு, உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.வடகோவை ரயில்வே தண்டவாளம் அருகில், 85 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தடுமாறியபடி மயக்க நிலையில், எழுந்து நடக்க முடியாமல் உட்கார்ந்திருந்தார்.அங்கிருந்த பயணிகள் சிலர், அவரை மீட்டு அமர வைத்து, குடிப்பதற்கு தண்ணீர் மற்றும் தேனீர் கொடுத்தனர். சற்று தெம்பு வந்த முதியவர், தனது பெயர் கிருஷ்ணசாமி என்றும், தனது முகவரி சுந்தரம் வீதி என்றும் கூறி உள்ளார். அதற்கு மேல் வேறு தகவல் எதுவும் அவரால் கூறமுடியவில்லை.அங்கிருந்தவர்கள், 'ஈரநெஞ்சம்' அறக்கட்டளைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து விசாரித்த போது, சுந்தரம் வீதி, ரத்தினபுரி பகுதியில் இருப்பது தெரிந்து, அவரது வீட்டு முகவரியை கண்டு பிடித்து, முதியவர் பற்றி தகவல் தெரிவித்தனர். கடந்த மூன்று நாட்களாக, தந்தையை காணாமல் தேடிக் கொண்டு இருப்பதாக, அவரது மகள் வித்யா கூறினார். உடனடியாக வடகோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த வித்யா, தனது தந்தையை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். கண்ணீர் மல்க கட்டிக்கொண்டார். தனது தந்தையை பத்திரமாக மீட்டு, ஒப்படைத்த ஈரநெஞ்சம் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு, நன்றி தெரிவித்து, தந்தையை வீட்டுக்கு அழைத்து சென்றார்.