மலைப்பாதையில் யானை உலா; சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
பொள்ளாச்சி; பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், மாலை நேரத்தில் ஒற்றை காட்டு யானை முகாமிடுவதால், சுற்றுலா பயணியர் கவனமுடன் செல்ல வேண்டும் என, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, பொள்ளாச்சி வனச்சரகத்தில், பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், கடந்த சில நாட்களாக ஆழியாறு மற்றும் சுற்றுப்பகுதிகளில், 'சில்லிக்கொம்பன்' என்ற ஒற்றை காட்டு யானை முகாமிடுகிறது.மணிமண்டப சுவரை இடித்து, மா மரக்கிளையை உடைத்து சாப்பிடுகிறது. மாம்பழங்கள் இருப்பதால், தொடர்ந்து அப்பகுதியில் ஒற்றை காட்டு யானை, மாலை நேரங்களில் முகாமிடுகிறது.நேற்றுமுன்தினம் ரோட்டில் நடந்து சென்ற யானையால், வாகன ஓட்டுநர்கள் அச்சத்தில் வாகனங்களை அப்படியே நிறுத்தினர். வனத்துறையினர், யானையை விரட்டிய பின், வாகனங்கள் சென்றன. யானை நடமாட்டத்தை, வனத்துறையினர் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'வால்பாறை செல்லும் மக்கள் கவனமுடன் செல்ல வேண்டும்; ஆங்காங்கே வாகனங்களை நிறுத்த வேண்டாம். சாலையோரங்களில் யானை மற்றும் வனவிலங்குகளை பார்த்தால் 'செல்பி' எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.