கடைகளுக்கு யானைகள் விசிட்: விரட்ட முடியாமல் தவிப்பு
வால்பாறை : வால்பாறை அடுத்துள்ளது கவர்க்கல் டீ எஸ்டேட். இங்கு நேற்று முன் தினம் இரவு கூட்டமாக வந்த யானைகள், காமாட்சியம்மன் கோவில் அருகே உள்ள டீ கடையை சேதப்படுத்தியது.அதன் பின் கவர்க்கல் முதல் பிரிவில் ராஜன் என்பவரின் கடையையும் யானைகள் இடித்து சேதப்படுத்தின. தகவல் அறிந்த எஸ்டேட் தொழிலாளர்கள் திரண்டு சென்று, விடிய விடிய, யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த எஸ்டேட் மேலாளர், வார்டு கவுன்சிலர் கனகமணி மற்றும் வனத்துறையினர் யானையால் சேதப்படுத்தப்பட்ட கடைகளை நேரில் பார்வையிட்டனர்.தொழிலாளர்கள் கூறுகையில், 'கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் இரவு நேரத்தில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் யானைகள் நிற்பது கூட தெரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். யானைகள் எஸ்டேட் பகுதிக்குள் நுழையாமல் தடுக்க, வனத்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்' என்றனர்.