தொழில்முனைவோருக்கு தனி ஆணையம் சுதேசி ஜாக்ரன் மஞ்ச் வலியுறுத்தல்
கோவை: தொழில் முனைவோருக்கென்று, மத்திய மாநில அரசுகள் தொழில்முனைவோர் ஆணையம் உருவாக்க, சுதேசி ஜாக்ரன் மஞ்ச் வலியுறுத்தியுள்ளது. சுதேசி ஜாக்ரன் மஞ்ச் தமிழ்நாடு அமைப்பாளர் சதீஷ்குமார், இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கோவை வந்தார். கோவை குஜராத் சமாஜ் அரங்கில், நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது: இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்றி, வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். உள்நாட்டு தயாரிப்புகளை வீடுகளில் பயன்படுத்த, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.தொழில் முனைவோருக்கென்று, மத்திய, மாநில அரசுகள் தொழில்முனைவோர் ஆணையம் உருவாக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, டிஜிட்டல் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.உள்ளூர் தொழில்களை ஊக்குவிக்க, மாவட்ட மற்றும் மாநில அளவிலான சுதேசி பொருட்கள் மேளா நடத்த வேண்டும். 2047ல் நம் நாடு, வளர்ந்த நாடாக மாற, தொழில்முனைவோரின் பங்கு அதீதமானது. அதற்கு இளைஞர்களின் பங்கு அவசியம்.இவ்வாறு, அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் பல்கலை மாணவர்கள் பங்கேற்றனர். பெண் தொழில்முனை வோர், மகளிர் சுய உதவி குழுக்கள் தங்களது பொருட்களை காட்சிப்படுத்தினர். பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்ற, குழு விவாதம் நடந்தது. திரளான இளைஞர்கள் மற்றும் மகளிர் பங்கேற்றனர்.