கொஞ்சம் அசந்தாலும் கிணற்றுக்குள் விழ வேண்டியதுதான்! மருதமலை ஐ.ஓ.பி.,காலனி டூ பாலாஜி நகர் செல்வோருக்கு ஆபத்து
கால்வாயில் பிளாஸ்டிக் அடைப்பு
கணபதி, சி.எம்.எஸ்., பள்ளி அருகே உள்ள கால்வாயில் தொடர்ந்து சிலர் குப்பையை வீசிச்செல்கின்றனர். கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில் அடைத்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கையில்லை.- அன்பு, கணபதி. ஆபத்தான கிணறு
மருதமலை ரோடு, ஐ.ஓ.பி., காலனி, பாலாஜி நகர் செல்லும் வழியில் சாலையோரம் கிணறு ஒன்று உள்ளது. சாலைக்கு மிக நெருக்கமாக, தடுப்புகள் இல்லாமல் உள்ள இந்த கிணறு ஆபத்தாக உள்ளது. இப்பகுதியில் தெருவிளக்குகளும் இல்லாததால், விபத்து நடக்க வாய்ப்புள்ளது.- சாரதி, மருதமலை. மிரட்டும் நாய்
உப்பிலிபாளையம், 55வது வார்டு, கபிலன் கார்டன், ராமானுஜம் நகர் கிழக்கில், தெருநாய் ஒன்று அனைவரையும் துரத்தி கடிக்கிறது. சாலையில் சென்ற சிறுவன் மற்றும் முதியவரை கடித்துள்ளது. குழந்தைகளுக்கு ஆபத்து என்பதால், நாயை பிடித்துச் செல்ல வேண்டும்.- வேணி, உப்பிலிபாளையம். வீணாகும் குடிநீர்
வடவள்ளி, 38வது வார்டு, தொண்டாமுத்துார் ரோட்டிலிருந்து பேரூர் செல்லும் வழியில், பல வாரங்களாக குடிநீர் குழாய் உடைந்துள்ளது. அதிகளவு தண்ணீர் சாலையில் வீணாகிறது. தொடர்ந்து புகார் செய்தும், குழாய் உடைப்பை சரிசெய்ய நடவடிக்கையில்லை.- பன்னீர் செல்வம், வடவள்ளி. சேறான சாலையில் சிரமம்
வடவள்ளி, மகாராணி அவென்யூ, ஐந்தாவது பேஸ் பகுதியில், பாதாள சாக்கடை பணி முடிந்த பின்பும், சாலைகளை சீரமைக்கவில்லை. மண்ணாக இருக்கும் சாலையில், மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. வாகனஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.- ஜெயந்தி, வடவள்ளி. வாய்க்காலை சீரமைக்கணும்
வேடபட்டி முதல் வீரகேரளம் குளம் வழியாக, போகும் வாய்க்கால் பராமரிப்பின்றி உள்ளது. புதர், குப்பை, மண் நிரம்பி வாய்க்காலே தெரியாத அளவுக்கு உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியே இல்லை. பருவமழை தொடங்கும் முன், வாய்க்காலை சீரமைக்க வேண்டும்.- உன்னிகிருஷ்ணன், வேடபட்டி. மருதமலையில் ஆபத்து பயணம்
மருதமலையில் மலைப்பாதையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளில், பெரும்பாலானோர் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர். கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சந்திரசேகர், வடவள்ளி. இருளால் பாதுகாப்பில்லை
சரவணம்பட்டி, சத்தி மெயின் ரோடு, நான்காவது வார்டில், 'எஸ்.பி - 45, பி -16' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த ஒரு வாரமாக தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் வெளியே செல்லவே, பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.- முருகேசன், சரவணம்பட்டி. புதிய மின்கம்பம் வேண்டும்
மேற்கு மண்டலம், பாப்பநாயக்கன்புதுார், 21வது வார்டு, 124 எண் கொண்ட மின் கம்பம் சாய்ந்து ஒரு மாதம் ஆகிறது. மின்பணியாளர்கள் மின்இணைப்பை துண்டித்துவிட்டு, கம்பத்தை அங்கேயே போட்டுள்ளனர். கடந்த ஆறு மாதமாக, இப்பகுதிக்கு புதிய மின்கம்பம் அமைத்து கொடுக்குமாறு வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை.- குணசேகரன், பாப்பநாயக்கன்புதுார். சிக்னல் பழுது
ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, பால் கம்பெனி சந்திப்பில் உள்ள சிக்னலில் சில விளக்குகள் எரிவதில்லை. முக்கியமாக சம்பந்தம் சாலை செல்லும் வழியில், விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் விபத்துகளும் அதிகரிக்கிறது.- கோபாலகிருஷ்ணன், ஆர்.எஸ்.புரம். மரக்கிளைகளால் இடையூறு
பிஷப் அப்பாசாமி காலேஜ் ரோடு, 83வது வார்டில், மின்ஒயர்களுக்கு இடையூறாக இருந்த மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு, நடைபாதையில் போடப்பட்டுள்ளது. பாதசாரிகள் சாலையில் நடந்து செல்கின்றனர். வாகனஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை வேண்டும்.- பாலா, காந்திபுரம். தொற்று நோய் அபாயம்
விளாங்குறிச்சி, ஒன்பதாவது வார்டு, காந்தி வீதியில், சாக்கடை சுத்தம் செய்யப்பட்டு பல வாரங்கள் ஆகின்றன. சாக்கடை கால்வாய் நிரம்பி, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.- சிவக்குமார், காந்திவீதி.