அவரவர் குப்பை அவரவர் பொறுப்பு; சுத்தமாகுது சுகாதாரத்துறை அலுவலகம்
கோவை; கோவை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் முதன்முறையாக, 'கிளீன் கேம்பஸ்' கூட்டம் நேற்று வளாகத்தில் நடந்தது. இதில், ஒவ்வொரு துறை அதிகாரிகளுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. ரேஸ்கோர்ஸ் சாலையில், மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு, 12 முக்கிய பிரிவுகள் செயல்படுகின்றன. இந்த அலுவலக வளாகம், சுகாதாரமின்றி இருப்பது குறித்து, நமது நாளிதழில் செய்தி, படங்கள் வெளியானது. இதையடுத்து, தற்போது வளாகம் முழுவதும் துாய்மை பணிகள் நடந்துவருகின்றன. சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுக்கும், 'கிளீன் கேம்பஸ்' மையமாக கொண்டு, நேற்று கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், வளாகம் துாய்மையாக பராமரிக்கப்பட வேண்டும், அந்தந்த துறை சார்ந்த குப்பையை, சரியான முறையில் அகற்றுவதை, துறை அதிகாரிகள் கவனிக்க வேண்டும், கூட்டங்கள் நடத்தும் போது, உணவு வழங்கினால் அதன் கழிவுகளை சரியான முறையில் அப்புறப்படுத்தவும், தேவையற்ற வாகனங்களை அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. போதுமான குப்பைத்தொட்டிகளை வளாகத்தில் வைக்கவும், குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை அதை அப்புறப்படுத்தவும், மாநகராட்சிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.