உற்சாகமாக ஒரு நாள் சுற்றுலா; அனுமதி கிடைத்தவுடன் ஜரூர்
கோவை; கோவையில் உள்ள மூன்று கோவில்கள், ஒரு சுற்றுலா தலத்தை ஒரு நாள் சுற்றுலாவாக கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய, தமிழக சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள், சில சுற்றுலா தலங்கள் உள்ளன. தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகள், பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், இங்கிருக்கும் முக்கிய கோவில்கள், சுற்றுலா தலங்களை கண்டு களிக்கின்றனர்.இந்நிலையில், சுற்றுலா துறை சார்பில், முதற்கட்டமாக, கோவை மருதமலை கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், வெள்ளியங்கிரி மலையடிவாரம், கோவை குற்றாலம் ஆகிய பகுதிகளுக்கு, ஒரு நாள் சுற்றுலா அழைத்து செல்லும் வகையில், ஏற்பாடு செய்யப்பட உள்ளது.ஒருவருக்கு, ஆயிரம் ரூபாய் என்ற கட்டணத்தில், 21 பேரை ஒரு சுற்றுலா வாகனத்தில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.காந்திபுரத்தில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் இருந்து, முதலில் மருதமலை கோவில், கோவை குற்றாலம், வெள்ளியங்கிரி, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று விட்டு, மீண்டும் சுற்றுலா அலுவலகம் வரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.அரசின் அனுமதி கிடைத்தவுடன், பொதுமக்களின் ஆதரவை பொறுத்து, இடங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.