அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்ட எதிர்பார்ப்பு
அன்னுார்; நாகமாபுதூரில் அபாய நிலையில் உள்ள பழைய அங்கன்வாடி கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அன்னுார் ஒன்றியத்தில், இரண்டரை வயது முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகள் அங்கன்வாடி மையங்களில் சேர்க்கப்படுகின்றன. சத்துமாவு உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவு பொருட்களுடன் கல்வி கற்பிக்கப்படுகிறது.அன்னுார் பேரூராட்சியில், நாகமாபுதூரில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட கட்டடம் கட்டப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேலானது. மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அப்பகுதியில் உள்ள சமுதாயக் நலக் கூடத்தில் தற்காலிகமாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.இதுகுறித்து அப்பகுதி பெற்றோர் கூறுகையில், 'தற்காலிக கட்டடத்தில் கழிப்பறை, குடிநீர் என போதுமான வசதிகள் இல்லை. பழைய அங்கன்வாடி கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, அங்கன்வாடி மையத்திற்கு, குடிநீர் இணைப்பு, கழிப்பறை ஆகியவற்றுடன் சொந்த கட்டடம் கட்டித் தரும்படி பல ஆண்டுகளாக கோரி வருகிறோம். எனினும் நடவடிக்கை இல்லை. விரைவில் சொந்த கட்டடம் கட்டித் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.