உரக்கிடங்கு ஊழியரிடம் பணம் பறிப்பு: மூவரை தேடும் போலீசார்
கோவை; கூட்டுறவு உரக்கிடங்கு உதவியாளரிடம் பணத்தை பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை, சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த, 27 வயது வாலிபர் உரக்கடங்கில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 'கிரிண்டர்' செயலி வாயிலாக, ஒருவர் அறிமுகமானார்.அவர் சரவணம்பட்டியில் உள்ள பள்ளியின் அருகே வருமாறு கூறினார். இதையடுத்து கடந்த, 25ம் தேதி அங்கு சென்றார். அங்கு நின்றிருந்த நபர், வாலிபரை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.அப்போது அங்கிருந்த இருவருடன் சேர்ந்து, மூவரும், மொபைல்போனை பறித்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டினர். தன் வங்கிக்கணக்கில் பணம் இல்லை என, வாலிபர் தெரிவித்தார். நண்பர்களுக்கு போன் செய்து பணம் பெற அறிவுறுத்தினர். இதையடுத்து வாலிபர் நண்பர்களிடம் பேசி, ரூ.10 ஆயிரம் பெற்றார். இதையடுத்து மூவரும், தங்களது கணக்கிற்கு பணத்தை ஆன்லைன் வாயிலாக மாற்றிக் கொண்டனர். தொடர்ந்து வாலிபரை மிரட்டி விட்டு தப்பினர். இதுகுறித்து வாலிபர் சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.