உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு விடுதிகளில் வசதிகள் போதாது; இன்னும் மேம்படுத்த வேண்டுகோள்

அரசு விடுதிகளில் வசதிகள் போதாது; இன்னும் மேம்படுத்த வேண்டுகோள்

கோவை; கோவை மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்காக, 26 விடுதிகள் செயல்படுகின்றன. இதில், பள்ளி மாணவர்களுக்காக, 11 விடுதிகள் செயல்படுகின்றன. காந்தி மாநகரில் இயங்கும் அரசு குழந்தைகள் காப்பகத்தில், ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவியர் தங்கியுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களுடன், பிற காரணங்களுக்காக, ஆறு சிறுமியர் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆரம்பப்பள்ளியில் படிக்கும் 15 மாணவியர் தங்கியிருப்பதால், பொழுதுபோக்கிற்காக, விடுதி வளாகத்தில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது; விளையாட்டு உபகரணங்கள் போதுமானதாக இல்லை. மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள், உதவியாளர்கள் நியமிக்க வேண்டும். உளவியல் ஆலோசகர்கள் வாரம் மூன்று நாட்கள் வருகிறார்கள். நிரந்தரமாக ஒருவர் பணியமர்த்த வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது. சுங்கம் பகுதியில் உள்ள, ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி வளாகத்தில், கல்லுாரி மாணவியருக்கு இரண்டு விடுதிகள், பள்ளி மாணவியருக்கு ஒரு விடுதி இயங்குகின்றன. மாணவியர் விடுதியில், பள்ளி மாணவியருக்கு மூன்று அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த அறைகள் போதாது. மாணவியர் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, காலையில் கிளம்பும்போது குளியலறை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாகவும், அடிப்படை வசதிகள் இன்னும் தேவைப்படுவதாகவும், மாணவியர் தெரிவித்தனர்.

பெயரளவுக்கு ஆய்வு;

எப்படி கிடைக்கும் தீர்வு?

குழந்தைகள் காப்பகத்தில் அவர்கள் தங்கியிருக்கும் சமயத்தில், அரசு துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்தால் மட்டுமே, அவர்களின் தேவையை கேட்டறிய முடியும். வசதி குறைபாடு மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தெரியவரும். குழந்தைகள் இல்லாத சமயத்தில் சென்று, ஆவணங்கள் மற்றும் கட்டடங்களை மட்டும் பார்வையிடுவதால், குழந்தைகளின் தேவைகளுக்கு தீர்வு கிடைக்காது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி