உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயனாளி விபரம் பதிய தவறினால்.. போலி ரேஷன் கார்டு ரத்து! முறைகேடுகள் தடுக்க அரசு அதிரடி

பயனாளி விபரம் பதிய தவறினால்.. போலி ரேஷன் கார்டு ரத்து! முறைகேடுகள் தடுக்க அரசு அதிரடி

கோவை; ரேஷன் கார்டுகளால் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்கவும், போலி ரேஷன்கார்டுகளை ஒழிக்கவும், அனைத்து ரேஷன்கார்டுதாரர்களும் மார்ச் 31க்குள், தங்கள் உண்மையான விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவு செய்யாதோர் கார்டுகளுக்கு, பொருட்கள் வழங்குவதை நிறுத்த, வழங்கல் அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில், 11.5 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கார்டுதாரர்களுக்கு மானியத்தில் வழங்கப்படுகின்றன.மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும், ரேஷன் கார்டை அடிப்படையாக கொண்டே வழங்கப்படுகிறது.மத்திய அரசின் மானியத்தில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள், உண்மையான பயனாளிகளுக்கு போய் சேர்வ தில்லை என்றும், கார்டில் குடும்ப உறுப்பினர்களின் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் முறையாக செய்யப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.ரேஷன் துறையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் இ-கேஒய்சி (ekyc) பயனாளிகள் விபரங்களை, ரேஷன் கடைகளில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதன் அடிப்படையில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பிஹெச்ஹெச் (PHH) மற்றும் ஏஏஒய் (AAY) பயனாளி களின் விபரத்தினை, இ-கேஒய்சி மூலம் மார்ச், 31ம் தேதிக்குள், 100 சதவீதம் பதிவு செய்து முடிக்க வேண்டும் என, வழங்கல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த காலக்கெடுவுக்கு பிறகு, இ-கேஒய்சி பதிவு செய்யாத ரேஷன் கார்டுதாரர்களுக்கு, உணவு பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படுவதுடன், போலியான கார்டுகள் மற்றும் தவறான தகவல்கள் உள்ள கார்டுகளை ரத்து செய்ய, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.மத்திய அரசின் இந்த உத்தரவின் அடிப்படையில், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா கூறியிருப்பதாவது:கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில், இ-கேஒய்சி பதிவு செய்யப்படாத குடும்ப உறுப்பினர்களை, சிறப்பு முகாம் வாயிலாக கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். ரேஷன்கடை பணியாளர்களுக்கு, தனி தாசில்தார்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். கோவை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், துணைப்பதிவாளர், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அனைத்து வருவாய் தாசில்தார்கள், இந்த பணியினை கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

ஏன் இந்த திடீர் கெடுபிடி?

தமிழக அரசு செயல்படுத்தி வரும் பொது வினியோக திட்டத்தில், மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு திட்டமும், பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக கூடுதல் அரிசியும், கோதுமையும் மானியமாக வழங்கப்படுகிறது. சர்க்கரை, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகின்றன. இந்த பொருட்களை முறையாக பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். இதில் முறைகேடு எதுவும் இருக்கக் கூடாது என்ற நோக்கில், மத்திய அரசு இ-கேஒய்சி பதிவை கட்டாயப்படுத்தி உள்ளது.பல ரேஷன்கார்டுகளில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளன. வேறு ஊருக்கு குடி பெயர்ந்து சென்றவர்களின் கார்டை, வேறு நபர்கள் பயன்படுத்துகின்றனர். புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்கள், பழைய கார்டில் பெயரை நீக்காமல் உள்ளனர். இப்படி பல பிரச்னைகள் ரேஷன் கார்டில் உள்ளதால், சரி செய்யவே, இ-கேஒய்சி பதிவு என்கின்றனர் வழங்கல் துறை அலுவலர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை