கோவை கலெக்டர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு
கோவை: ஏற்கனவே பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் பெயரில், அதேபோன்று போலியான கணக்கைத் துவக்கி, மோசடி செய்யும் கும்பல், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளையும் விட்டுவைப்பதில்லை. ஏற்கனவே, தற்போது மின்வாரியத் துறை தலைவராக இருக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராதாகிருஷ்ணன் பெயரில் போலியாக ஒரு கணக்கு துவங்கி, அவரின் நண்பர் குழுவிடம் பணம் மோசடி முயற்சி நடந்தது. தற்போது, கோவை கலெக்டர் பவன்குமார் பெயரில், அவரது புகைப்படத்தைப் பயன்படுத்தி போலியான கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. பவன்குமார், திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக இருந்தபோது, அவரது அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கின் புரபைல் பகுதி மாற்றப்பட்டிருந்தது. அதன்பிறகு, அவரது கணக்கின் விவரங்கள் மாற்றப்படவில்லை. போலியாக உருவாக்கப்பட்டுள்ள பேஸ்புக் பக்கத்தில், பவன்குமார் ஜி, கிரியப்பனவர் ஐ.ஏ.எஸ்., எனக் குறிப்பிட்டு, அவர் கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, போலிக் கணக்கு துவக்கப்பட்டுள்ளது. இந்த போலிக் கணக்கு குறித்து, தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவு செய்துள்ள கலெக்டர், 'போலியான அக்கவுன்ட். ரிப்போர்ட் செய்யுங்கள்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.