வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்துக்கு நஷ்டஈடு பத்தல...! அதிகரித்து வழங்க விவசாயிகள் முறையீடு
பெ.நா.பாளையம்; வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்துக்கு வனத்துறையினரால் வழங்கப்படும் நஷ்டஈடு தொகை வெகு குறைவாக உள்ளது. இதை அதிகரித்து வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை வடக்கு மலையோர கிராமங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகள், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளால் தொடர்ந்து பயிர் சேதம் ஏற்படுகிறது. வனவிலங்குகளால் குறிப்பாக, யானை, காட்டுப்பன்றி ஆகியவற்றால் ஏற்படும் பயிர் சேதத்துக்கான நஷ்ட ஈடு தொகை வெகு குறைவாக உள்ளது. இதை அதிகரித்து வழங்க, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இது குறித்து சாதி, மதம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில அமைப்பாளர் விவசாயி பிரபு கூறியதாவது: 'வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்துக்கு தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை, வேளாண் பொறியியல் துறை வல்லுனர்கள் பரிந்துரைக்கும் இழப்பீட்டுத் தொகையை வழங்க, வனத்துறையினர் முன்வர வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் வாழை சேதத்துக்கு ஏக்கர் அளவில் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும். எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்பட மாட்டாது என, வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். அதுவும் எத்தனை வாழை மரங்கள் சேதம் ஆனாலும் அதிகபட்ச இழப்பீட்டு தொகையாக, 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என, கூறுகின்றனர்.தற்போது, சென்ட் கணக்கில் மட்டுமே வாழை இழப்பீடு தொகை வழங்கப்படும் என, அறிவித்துள்ளதால், வெகு குறைவாகவே வாழை விவசாயிகளுக்கு இழப்பீடாக கிடைக்கிறது. உதாரணமாக, 10 சென்ட் அளவில் உள்ள வாழை மரங்கள் சேதமாகி இருந்தால், வெறும், 2,500 ரூபாய் மட்டுமே இழப்பீடாக பெற முடியும். இதே போல வனவிலங்குகளால் தென்னை மரம் சேதப்படுத்தப்பட்டால், வனத்துறையினர், 500 ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர். தரமான தென்னங்கன்றே இன்று, 500 ரூபாய் விலை ஆகிறது.நன்கு வளர்ந்த குலை தள்ளும் தென்னை மரங்களுக்கு, 500 ரூபாய் வழங்குவது என்பது யானை பசிக்கு சோளப்பொறி என்பது போல உள்ளது. நெடுஞ்சாலை துறையினர் அல்லது மின்சார வாரியத்தினர், நில ஆர்ஜிதம் செய்யும் போது, வேளாண்மை நிலங்களில் தென்னை மரம் இருந்தால், ஒரு மரத்துக்கு, 35 முதல், 70 ஆயிரம் ரூபாய் வரை நஷ்ட ஈடு நிர்ணயம் செய்து, விவசாயிகளுக்கு வழங்குகின்றனர். ஆனால், வனத்துறையினரோ வெறும், 500 ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர்.வனவிலங்குகளால் ஏற்படும் வேளாண் பயிர் சேதத்துக்கு வனத்துறையினர் நஷ்ட ஈடு தொகையை அதிகரித்து தர முன்வர வேண்டும்'இவ்வாறு அவர் கூறினார்.
பழைய நடைமுறை அவசியம்
சில ஆண்டுகளுக்கு முன்பு பயிர் சேதம் வனவிலங்குகளால் ஏற்பட்டால், வேளாண் துறை பரிந்துரைக்கும் இழப்பீட்டு தொகையில் சிறிய அளவில் குறைத்துக் கொண்டு, வனத்துறையினர் வழங்கி வந்தனர். தற்போது வேளாண்துறை பரிந்துரை இல்லாமல், வனத்துறையினர் தாமாகவே மிகச்சிறிய தொகையை பயிர் சேதத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக வழங்குகின்றனர். இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே, வேளாண் பயிர்களுக்கு நியாயமான நஷ்ட ஈடு தொகை வழங்கும் பழைய நடைமுறையை செயல்படுத்த, அரசு முன்வர வேண்டும் என, முன்னோடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.