வெப்பம் தணிக்க துவங்கிய மழை நீடிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
உடுமலை, : உடுமலை பகுதியில், நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது; வறட்சி நீங்க மழை நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், பி.ஏ.பி., மற்றும் அமராவதி அணை பாசனத்துக்கு பல்வேறு சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். பாசன காலம் துவங்கிய பிறகு, மழை இல்லாததால், நிலைப்பயிர்கள் பாதிக்கப்பட்டு வந்தது.குறிப்பாக, மக்காச்சோளம் சாகுபடியில், பி.ஏ.பி., பாசன சுற்று இடைவெளியில், அதிக வெயில் மற்றும் வறட்சியான காற்று நிலவியதால், பயிர்கள் பாதிக்கப்பட்டது. வழக்கத்தை விட வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்ததால், அனைத்து தரப்பினரும் மழையை எதிர்பார்த்திருந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு உடுமலை சுற்றுவட்டாரங்களில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, உடுமலை நகரம், 20 மி.மீ., ; வரதராஜபுரம், 32; மடத்துக்குளம், 22; பெதப்பம்பட்டி, 7; பூலாங்கிணறு 18; கோமங்கலம் 27; திருமூர்த்திநகர் 18; நல்லாறு 6 மி.மீ., என்றளவில் மழை பதிவாகியிருந்தது.அதே போல், அமராவதி அணைப்பகுதியில் 10 மி.மீ., திருமூர்த்தி அணை 18 மி.மீ., உப்பாறு அணைப்பகுதியில் 56 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.நிலைப்பயிர்களுக்கு உதவும் வகையில், மழை பெய்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, வறட்சி நீங்கும் வகையில், மழை நீடிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.