உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிரம்பிய தடுப்பணையால் விவசாயிகள் மகிழ்ச்சி! கிணறுகளில் நீர்மட்டம் உயர்வு

நிரம்பிய தடுப்பணையால் விவசாயிகள் மகிழ்ச்சி! கிணறுகளில் நீர்மட்டம் உயர்வு

மேட்டுப்பாளையம்: பெள்ளாதி ஊராட்சியில் ஏழு எருமை பள்ளத்தில், புதிதாக கட்டியுள்ள தடுப்பணையில்தண்ணீர் நிரம்பிவழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெள்ளாதி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் அருகே, ஏழு எருமை பள்ளம் உள்ளது. பெள்ளாதி குளம் நிரம்பி வழியும் தண்ணீர், ஏழு எருமை பள்ளத்திற்கு வருகிறது. மொங்கம்பாளையத்தில் மூங்கில் குட்டை உள்ளது. இந்த குட்டைக்கு மழை நீர் வருவதற்கு போதிய வழிப்பாதைகள் இல்லை. அதனால் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதையடுத்து அண்ணா நகர் அருகே, ஏழு எருமை பள்ளத்தில், அரசு நிதி, 45 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவிலும், பொதுமக்கள் நிதியில் 55 லட்சம் ரூபாய் செலவிலும், மொத்தம் ஒரு கோடி ரூபாயில் ஏழு எருமை பள்ளத்தில், 140 அடி நீளம், 10 அடி உயரமுள்ள தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தற்போது பெள்ளாதி குளத்திற்கு அத்திக்கடவு தண்ணீர் வருகிறது. பெள்ளாதி குளத்தில் ஏற்கனவே தண்ணீர் நிரம்பி உள்ளது. அதனால் குளத்திற்கு வரும் அத்திக்கடவு தண்ணீர், அப்படியே வெளியேறி ஏழு எருமை பள்ளத்திற்கு செல்கிறது. ஏழு எருமை பள்ளத்தில் புதிதாக கட்டிய தடுப்பணைக்கு, பெள்ளாதி குளத்தில் இருந்து வரும் தண்ணீர், மழை நீர் ஆகிய இரண்டு ஒன்று சேர்ந்து வருவதால், தடுப்பணை நிரம்பி வழிகிறது. இது குறித்து பெள்ளாதி ஊராட்சி முன்னாள் தலைவர் பூபதி குமரேசன் மற்றும் விவசாயிகள் கூறியதாவது: தடுப்பணை கட்டி முடித்து, 20 நாட்களிலேயே பள்ளத்தில் வந்த தண்ணீரால், பத்தடி உயரம் உள்ள தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதனால் தடுப்பணையைச் சுற்றி, இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள விவசாயக் கிணறுகளுக்கு, நீரூற்று கிடைத்து வருகிறது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தடுப்பணையிலிருந்து மூங்கில் குட்டைக்கு குழாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்ல, காரமடை ரோட்டரி சங்கம், உதவி செய்ய முன் வந்தள்ளது. 18 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மூங்கில் குட்டையில் தண்ணீர் தேங்கி நிற்கும் பொழுது, சுற்றுப்பகுதி விவசாய கிணறுகளுக்கு, நீரூற்று கிடைக்கும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி