உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திறந்தவெளி கிணறுகளை மூட முடியாமல் விவசாயிகள் தத்தளிப்பு! மண் கொண்டு செல்ல தடை காரணமாக சிக்கல்

திறந்தவெளி கிணறுகளை மூட முடியாமல் விவசாயிகள் தத்தளிப்பு! மண் கொண்டு செல்ல தடை காரணமாக சிக்கல்

பெ.நா.பாளையம்; சின்னதடாகம் வட்டாரத்தில் பயன்படுத்தாத கிணறுளை மூடுவதற்கு தீர்வு வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகளிடையே எழுந்துள்ளது.சின்னதடாகம் வட்டாரத்தில், 180க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வந்தன. இவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுவதோடு, மக்களுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டன.இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி, பன்னிமடை, சோமையம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் இயங்கி வந்த, 180 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்க தடை விதிக்கப்பட்டது.மேலும், ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மண்ணை வாகனங்களில் கொண்டு செல்வதோ அல்லது பிற வகைகளில் கொண்டு செல்வதோ கூடாது என, தடை விதிக்கப்பட்டது. இத்தடையை கோவை மாவட்ட நிர்வாகமும், அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் சின்னதடாகம் வட்டாரத்தில் உள்ள, 25க்கும் மேற்பட்ட பயன்பாடு இல்லாத கிணறுகளை மூட முடியாமல் விவசாயிகள் தத்தளித்து வருகின்றனர். இது குறித்து, நஞ்சுண்டாபுரம் விவசாயி பிரபு கூறுகையில், சின்னதடாகம் வட்டாரத்தில், 25க்கும் மேற்பட்ட சுமார், 150 அடி ஆழமுள்ள கிணறுகள் திறந்த வெளி கிணறுகளாக உள்ளன. பயன்பாட்டில் இல்லாத இக்கிணறுகளை பராமரிப்பது பெரும் சிரமமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதியான இங்கு இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம். குறிப்பாக காட்டுப்பன்றி, யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பட்டியலில் உள்ள இந்த விலங்குகள் கிணற்றில் தவறி விழுந்தால், விவசாயிகள் வனத்துறையினரின் வழக்குகளுக்கு ஆளாக வேண்டி உள்ளது. மேலும், திறந்தவெளி கிணறுகளில் மோட்டார் ரிப்பேர் உள்ளிட்ட தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டால், அதை சரி செய்ய ஆட்களை பணியில் ஈடுபடுத்த வேண்டியுள்ளது. இது போன்ற சிரமங்களை தவிர்க்க பெரும்பாலானவர்கள் ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், சின்னதடாகம் வட்டாரத்தில் மண்ணை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வாகனங்களில் கொண்டு செல்லக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவு இருப்பதால், பயன்பாடு இல்லாத கிணறுகளை மூட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ஆனால், மாசற்ற கட்டடக் கழிவுகளை கொண்டு நிரப்பலாம். இது தொடர்பாக சின்னதடாகம் வட்டார விவசாயிகள் மாசற்ற கட்டடக் கழிவுகளை கிணறுகளில் நிரப்ப விருப்பப்பட்டால், 94873 62024 என்ற எண்ணை தொடர்பு கொண்டால், மாவட்ட நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.இதற்கு அரசும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

பிளாஸ்டிக் கழிவு கொட்டக் கூடாது

பொதுவாக, கிணறுகளில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட கூடாது. சிலர் கிணறுகளில் கழிவுகளை கொட்டி தீ வைக்கின்றனர். இது பேராபத்தை ஏற்படுத்தும். இதே போல ஒர்க் ஷாப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் பவுண்டரி மண்ணை கிணறுகளில் கொட்டுகின்றனர். இதனால் நிலத்தடி நீர் மாசுபடும். இந்த வட்டாரத்தில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள தண்ணீர் கெட்டு போய், விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாமல் போய்விடும். மேலும் தண்ணீரின் அமில, காரத்தன்மையில் மாற்றம் ஏற்படும். எனவே, கிணறுகளில் பிளாஸ்டிக் கழிவுகள், பவுண்டரி மண் ஆகியவற்றை கொட்டுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஏர்வேந்தர் தண்டபாணி
பிப் 19, 2025 08:18

கிணருகளை மூடாமல் விவசாயிகள் பயன்படுத்தவும். கழிவுகளை கொட்டகூடாது


N DHANDAPANI
பிப் 19, 2025 07:48

மேற்கு தொடர்ச்சி மலையோரம் இருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளில் ஒரு சில பேருக்கு இவ்வாறான சிறு பிரச்சனை இருக்கலாம் ஆனாலும் இங்கு உள்ள குட்டைகளில் கூட மண் இல்லாமல் போனதனால் தான் இவ்வாறு விவசாயிக்கு மண் கொண்டு வரும் பிரச்சனை அதிகமாகிவிட்டது சாதாரணமாக விவசாயி தன்னுடைய கிணற்றை மூட வேண்டிய நிலைமை அங்கு இருக்கும் தண்ணீர் அதல பாதாளத்திற்கு சென்றதனால் தான் தற்பொழுது மழை நீர் சரியாக பள்ளங்களில் வர ஆரம்பித்துள்ளதனால் இப்பொழுது மலையோரத்தில் கிணறுகளில் தண்ணீர் மேலே வர ஆரம்பித்து விட்டது . .இதனால் குறைந்த செலவில் தண்ணீர் எடுக்கும் வாய்ப்பு துளிர்த்து வருகிறது..... கிணறுகளை மூட வேண்டிய அவசியம் பொதுவாக சைட் போடும் எண்ணம் இருக்கும் விவசாயி அல்லாதவர்களுக்கு தான் தேவைப்படும். ..அத்தோடு கிணற்றில் வனவிலங்கு விழுந்ததற்காக வனத்துறையினர் அல்லது வருவாய்த் துறையினர் வழக்கு பதிந்தால் அது நடக்காத காரியம்.... அதற்கு நேரடியாக நாமே பதிலளிக்க இயலும் .... எனவே இதை சமாளிக்க உள்ள வழிகளில் சமாளித்து இனி மேலும் மண் திருட்டு நடக்காமல் பார்த்து வந்தோமென்றால் எதிர்காலத்தில் இது போன்ற அநாசிய பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம் அருகிலுள்ள குட்டைகளில் மண்ணெடுத்து கிணறுகளை நிரப்பிக் கொள்ள அரசு அளிக்கும் அனுமதி பெற்று இவ்வாறு கிணறுகளை மூடிக்கொள்ளலாம்


சமீபத்திய செய்தி