அரசு சிறப்பு திட்டத்தில் விவசாய மின் இணைப்பு 5 ஆண்டாக இழுத்தடிப்பதால் விவசாயிகள் அதிருப்தி
உடுமலை; உடுமலையில், 'டாப்செட்கோ' திட்டத்தில், 5 ஆண்டுகளாக விவசாய மின் இணைப்பு வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதால், விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், சிறு, குறு விவசாயிகளுக்கு, போர்வெல் அமைத்து, இலவச விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், விண்ணப்பிக்கும் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட அலுவலர்களாக ஆய்வு செய்யப்படுகிறது.தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு, கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க பரிந்துரை செய்யப்படுகிறது.நிலம் அடமானம் அடிப்படையில், கடன் பெற்று போர்வெல் அமைக்கும் விவசாயிகளுக்கு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், இலவச மின்சாரம் வழங்கவும், மின் மோட்டார் அமைக்க, 50 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, போர்வெல் அமைத்த விவசாயிகளுக்கு, மின் இணைப்பு வழங்காமல், 5 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.விவசாயிகள் கூறியதாவது:பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், சிறு, குறு விவசாயிகள் பாசனத்திட்டம் அமைக்க 'டாப்செட்கோ' திட்டத்தின் கீழ், 2019ம் ஆண்டு, தேர்வு செய்து, கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக, போர்வெல் அமைக்க கடன் பெற்றோம்.இதற்கான மானியமும் விடுவிக்கப்பட்டு, மின் மோட்டார் உள்ளிட்டவையும் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், மின் இணைப்பு வழங்குவதில், மின் வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.அரசுத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால், விவசாயிகள், 5 ஆண்டுகளாக மின் இணைப்பு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.இது குறித்து, மின் வாரியம், சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் பயனில்லை.தற்போது, சாதாரண வரிசை பதிவு, தட்கல் விவசாய மின் இணைப்பு திட்டத்தின் கீழ், மின் இணைப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், அரசு மானிய திட்டத்தில், இணைந்ததால், மற்ற திட்டங்களின் கீழ், மின் இணைப்பு பெற முடியாத சிக்கலும் உள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம், 'டாப்செட்கோ' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு, மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.