உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்குவாரி விதிமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கல்குவாரி விதிமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கோவை; கல்குவாரிகளில் மேற்கொள்ளும் சட்டவிரோத நடவடிக்கையால், விவசாயிகள் துன்பத்துக்கு ஆளாவதை தடுக்க கோரி, கனிமவளக்கொள்ளை தடுப்பு சிறப்பு புலனாய்வு எஸ்.பி.,க்கு விவசாயிகள் மனு அளித்துள்ளனர். கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க, மாநில பொது செயலாளர் கந்தசாமி, கோவை மாவட்ட கனிமவளக்கொள்ளை தடுப்பு புலனாய்வுக்குழு எஸ்.பி.,யிடம் அளித்த மனு: கோவை மாவட்டம் முழுக்க உள்ள பகுதிகளில், சுரங்க நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்தும் ஊழலால், சர்வ சாதாரணமாக விதிமுறை மீறல்கள், கணக்கிலடங்கா கனிமவளக்கொள்ளை, சுற்றுச்சூழல் பாதிப்பு, விவசாயிகளுக்கும் மக்களுக்கும் ஏற்படும் அபாயம், வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய், ராயல்டி ஏய்ப்பு செய்வதால், அரசு கருவூலத்துக்கு பேரிழப்பு ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக, விவசாயிகள் கிராமவாசிகள் மற்றும் கால்நடைகளுக்கு கொடுந்துன்பங்கள் நேர்கின்றன. வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. கேரளாவின் திருச்சூரை சேர்ந்த ஒரு நபர் பெயரில் நடைபெறும் ஒரு குவாரி, சட்டப்பூர்வ விதிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை மீறுகிறது. தடைசெய்யப்பட்ட கட்டமைப்புகளுக்கு அருகாமையில் கல்குவாரிகளை இயக்குதல், குடியிருப்புகளுக்கும், மயானத்துக்கும் அருகே குவாரிகள் செயல்படுதல் காரணமாக, பாசனக்கால்வாய்கள் தடுக்கப்பட்டு சாலையாக மாற்றம் செய்யப்படுகின்றன. குவாரி வாகனங்கள் அதன் வழியே இயக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை மற்றும் கோவில், கூட்டுறவு பால் சங்கங்கள் கல்குவாரிக்கு அருகே மிக நெருக்கமாக செயல்படுகிறது. அதே சமயம் 10 மீட்டர் விவசாய மின் இணைப்பு, 17 மீட்டரில் மேல்நிலை மின் கம்பி, 82 மற்றும் 106 மீட்டரில் இரு தடுப்பணைகள் மற்றும் பாரம்பரிய வண்டிப்பாதைகள் உள்ளன. அத்தனையும் விதிமீறல்கள். அரசு நிர்ணயித்துள்ள வெடிகளுக்கு பதிலாக, கனரகவெடி பயன்படுத்துவதால் பொதுமக்கள் விவசாயிகள், பால்கறக்கும் பசு மாடுகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகின்றன. இப்பிரச்னைகளிலிருந்து விவசாயிகளையும், பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ