உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குளம் இருந்தும் களம் காணல :அதிகாரிகள் மீது விவசாயிகள் புகார்

குளம் இருந்தும் களம் காணல :அதிகாரிகள் மீது விவசாயிகள் புகார்

அன்னுார்: 'அன்னுாரில் மேற்குப் பகுதியில் பெரும்பாலான குளங்களுக்கு அத்திக்கடவு நீர் வரவில்லை,' என, நீரேற்று நிலையத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் 1,914 கோடி ரூபாயிலான திட்டத்தில் அன்னுாரின் மேற்குப் பகுதியில் உள்ள குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வருவதில்லை என புகார் எழுந்துள்ளது. குன்னத்துாராம் பாளையத்தில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் ஆறாவது நீரேற்று நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் இங்கு அத்திக்கடவு - அவிநாசி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நடராஜன், கணேசன் மற்றும் விவசாயிகள் வந்தனர். திட்டத்தின் செயற்பொறியாளர் அப்புசாமியிடம், விவசாயிகள் கூறுகையில், 'வடவள்ளி, குப்பேபாளையம், பொகலுார், காரே கவுண்டன்பாளையம், காட்டம்பட்டி உள்ளிட்ட, அன்னுாரின் மேற்கு பகுதியில் உள்ள பெரும்பாலான குளம், குட்டைகளுக்கு அத்திக்கடவு நீர் வருவதில்லை. பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. சில ஊர்களில் பிரதான குழாயை உடைத்து குளங்களுக்கு தண்ணீர் நிரப்புகின்றனர். அதிகாரிகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. உடைப்பு ஏற்பட்ட இடத்தில் உடனுக்குடன் பழுது பார்ப்பதில்லை' என்றனர். அதிகாரிகள் பதிலளிக்கையில், 'தற்போது இத்திட்டத்தில் பழுது பார்க்க ஆறு குழுக்கள் மட்டுமே உள்ளன. இவை இன்னும் பத்து நாட்களில் அதிகப்படுத்தப்படும். உடைப்பு ஏற்பட்ட இடங்களில் விரைவில் பழுது பார்த்து தண்ணீர் வராத குளம் குட்டைகளுக்கு தண்ணீர் விட நடவடிக்கை எடுக்கப்படும். குழாயை உடைத்து தண்ணீர் எடுப்போர் மீது போலீசில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் போலீஸ் பாதுகாப்போடு குழாய் உடைப்பு சரி செய்யப்படும்' என உறுதியளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை