மேலும் செய்திகள்
இழப்பீடு வழங்குவதில் தொய்வு; விவசாயிகள் ஏமாற்றம்
26-Jul-2025
சூலுார்; தொழில் பூங்கா அமைக்க கையகப்படுத்தும் நிலங்களுக்கு, சந்தை மதிப்பில் இழப்பீட்டு தொகை கொடுக்க வேண்டும்,' என,விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், சூலுார் அடுத்த காடாம்பாடி, காங்கயம் பாளையம், அப்பநாயக்கன்பட்டி மற்றும் திருப்பூர் மாவட்டம் பருவாய் கிராமத்தில், 200 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி பாதுகாப்பு மற்றும் தொழிற் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, தனியார் பட்டா நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்த நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த, ஏப்., மாதம் கலெக்டர் தலைமையில் நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்குவது தொடர்பாக கூட்டம் நடந்தது. விவசாயிகளின் கோரிக்கைகள், நில நிர்வாக கமிஷனருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், விவசாயிகள் கேட்கும் அளவுக்கு இழப்பீட்டு தொகை வழங்க முடியாது. அதனால், மீண்டும் கூட்டம் நடத்தி முடிவு செய்ய, நிலம் எடுப்பு அதிகாரிக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, சம்மந்தப்பட்ட நில உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில, அரசு நிர்ணயித்துள்ள இழப்பீட்டு தொகையை ஏற்க முடியாது என, விவசாயிகள் கூறினர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஏக்கருக்கு, 1 கோடியே, 20 லட்சம் ரூபாய் வழங்குவதாக கூறியிருந்தனர். அதன்பிறகு நடந்த கூட்டத்தில், ஏக்கருக்கு, 15 முதல், 30 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்க முடியும் எனக்கூறுகின்றனர். கடந்த, பல ஆண்டுகளாக நிலத்தை கையகப்படுத்த போவதாக கூறியே காலத்தை கடத்தி எங்கள் வாழ்வாதாரத்தை சிதைத்து விட்டனர். அதனால், தற்போதைய சந்தை மதிப்பு ஏற்ப இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் நிலத்தை கொடுப்போம் இல்லை யென்றால் நிலத்தை கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
26-Jul-2025