உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சித்திரைச்சாவடி தடுப்பணை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

சித்திரைச்சாவடி தடுப்பணை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

தொண்டாமுத்தூர்; கோடைகாலத்தை பயன்படுத்தி, சித்திரைச்சாவடி தடுப்பணையை தூர்வார வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.கோவை மேற்கு தொடர்ச்சி மலையை அரணாக கொண்டு, தொண்டாமுத்தூர் வட்டாரப்பகுதி உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த பகுதியில், கோவையின் ஜீவநதியான நொய்யல் உருவெடுக்கிறது.நொய்யல் ஆறு இதன் கிளை வாய்க்கால்கள் மற்றும் மலையிலிருந்து வரும் பள்ளவாரி ஓடைகளை ஆதாரமாக கொண்டு, ஏராளமான குளங்கள் மற்றும் குட்டைகள் உள்ளன. நீர் வளம் செழித்துள்ளதால், இந்தப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகவும் விளங்கி வருகிறது.இந்நிலையில், நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணை மூலம் சுற்றியுள்ள, சுமார் 5,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.இந்நிலையில், சித்திரைச்சாவடி தடுப்பணையை, பல ஆண்டுகளாக தூர்வாராததால், தடுப்பணை முழுவதும் மணல் திட்டுக்கள் உருவாகி, நீர் வழிப்பாதை குறுகியுள்ளது. அதோடு, நீரை சேமிக்கும் அளவும் குறைந்துள்ளது.மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதும் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. இதனால், சித்திரைச்சாவடி தடுப்பணையை தூர்வார வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த அ.தி.மு.க, ஆட்சி காலத்தில், நொய்யல் ஆற்றை தூர்வாரி, புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தடுப்பணையை தூர்வாரவில்லை.தற்போது, கோடை காலம் துவங்கியுள்ளதால், நொய்யல் ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. கோடை காலத்தை பயன்படுத்தி, தடுப்பணையை தூர்வார, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை