சுத்திகரிக்காமல் ஓடையில் விடப்படும் பாதாள சாக்கடை கழிவு நீர்: விவசாயிகள் கண்ணீர் நிலத்தடி நீர் மாசவடைவதால் விவசாயிகள் கண்ணீர்
மேட்டுப்பாளையம் | ; பாதாள சாக்கடை கழிவு நீர், சுத்திகரிக்காமல் ஓடையில் விடுவதால், நிலத்தடி நீர் மாசடையும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஏழு ஆண்டுகளுக்கு முன், பாதாள சாக்கடை திட்டம் பணிகள் துவங்கின. நகராட்சியில் மொத்தம், 12,000 வீடுகளில் பாதாள சாக்கடை குழாய் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வரை, 2000 வீடுகளில் மட்டுமே குழாய் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கழிவுநீர் மின் மோட்டார் வாயிலாக, நேஷனல் நகர் அருகே நகராட்சி குப்பை கிடங்கில் கட்டியுள்ள, சுத்திகரிப்பு நிலையத்திற்கு பம்பிங் செய்யப்படுகிறது. அங்கு நவீன தொழில்நுட்ப முறையில், கழிவு நீரை சுத்தம் செய்து வெளியே விடுவதாக, பாதாள சாக்கடை திட்டத்தை கண்காணிக்கும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கழிவு நீரை சுத்தம் செய்யாமல் அப்படியே ஓடையில், திறந்து விடுவதாக மோத்தேபாளையம் கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நிலத்தடி நீர் மாசடைவதாகவும் தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள், மோட்டார் பழுதடைந்ததால், இரண்டு நாட்கள் கழிவுநீர் வெளியே திறந்து விட வேண்டிய நிலை ஏற்பட்டது. மற்ற நாட்களில் தண்ணீரை சுத்தம் செய்து விடுகிறோம் என, கூறினர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: சிக்கதாசம்பாளையம் ஊராட்சி எல்லையில் கட்டி உள்ள குட்டையில், கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மாசடையும் அபாயம் உள்ளது. இதற்கு தீர்வு காணாவிட்டால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து, தாசில்தார் அலுவலகம் முன் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு விவசாயிகள் கூறினர். இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய, பாதாள சாக்கடை திட்ட உதவி செயற் பொறியாளர் மஞ்சுளா கூறுகையில்,கழிவுநீரை சுத்தம் செய்து தேவையான அளவு குளோரின் கலந்துதான், தண்ணீரை வெளியே விடுகிறோம், என்றார். ஆனால் ஓடையில் சுத்தம் செய்யாத கழிவுநீர் தொடர்ந்து, வெளியேறி வருகிறது.