ரோடு சீரமைக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கிணத்துக்கடவு: அரசம்பாளையம் - கொண்டம்பட்டி ரோட்டை சீரமைக்க வேண்டி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிணத்துக்கடவு, அரசம்பாளையம் கிராமத்தில் இருந்து கொண்டம்பட்டி செல்லும் ரோட்டில், தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ளது. இந்த ரோட்டில் நாள்தோறும் வேலைக்கு செல்லும் நபர்கள் மற்றும் விவசாயிகள் பயணிக்கின்றனர். ரோடு பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. தற்போது, இந்த ரோட்டில் வாகன ஓட்டுநர்கள் செல்ல தயக்கம் காட்டுகின்றனர். மேலும், ரோடு முழுவதும் மேடு பள்ளமாக காணப்படுகிறது. குறிப்பாக, மழை காலங்களில் பைக்கில் செல்லவே முடியாத நிலை உள்ளது. ரோட்டை சீரமைக்க வேண்டி, கொண்டம்பட்டி மக்கள் வலியுறுத்தி வந்தாலும், தற்போது வரை சீரமைக்கவில்லை. இந்நிலையில், இந்த ரோட்டை சீரமைக்க வலியுறுத்தி, கொண்டம்பட்டி கிளை தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று பஸ் ஸ்டாப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.