உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பண்ணாரி மலைப்பாதையில் இரவில்... பரிதவிக்கும் விவசாயிகள், பொதுமக்கள்

பண்ணாரி மலைப்பாதையில் இரவில்... பரிதவிக்கும் விவசாயிகள், பொதுமக்கள்

அன்னுார்: கோவையில் இருந்து பண்ணாரி வழியாக, கர்நாடகா செல்லும் மலைப்பாதையில் அறிவிக்கப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாட்டால் விவசாயிகள், பொதுமக்கள் பரிதவிக்கின்றனர். கோவையில் இருந்தும், கேரளாவில் இருந்தும் அன்னுார், சத்தி, பண்ணாரி வழியாக கர்நாடகாவுக்கு தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. மேலும் கர்நாடகாவில், மைசூர், சாம்ராஜ்நகர், திரக்கணாம்பி, கொள்ளேகால், குண்டல்பேட் பகுதியில் இருந்து தினமும் பல ஆயிரம் வாகனங்கள், தக்காளி, பருத்தி, பயறு, நிலக்கடலை உள்ளிட்ட விவசாய விளை பொருட்களுடன் சத்தி மற்றும் கோவைக்கு வருகின்றன. வனப் பகுதியில் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்வதால் அங்குள்ள வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன என சமூக ஆர்வலர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதை விசா ரித்த உயர் நீதிமன்றம் வனப் பகுதியில் இரவு 9:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை வாகனங்களை இயக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவால் கடும் சிரமங்களை சந்திப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அன்னுார் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கூறியதாவது : கோவை மாவட்டத்திலிருந்து மின் மோட்டார், பம்ப் செட், கிரைண்டர், மிக்ஸி, ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் கர்நாடகாவுக்கு செல்கின்றன. மேலும் அன்னுார், புளியம்பட்டி, சத்தியை சேர்ந்த விவசாயிகள் பலர் கர்நாடக மாநிலத்தில் தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரில் மாலை 6:00 மணிக்கே பயணிகள் பேருந்து நிறுத்தப்படுகிறது. அதேபோல் சத்தியிலிருந்து ஆறு மணிக்கு பிறகு வாகனங்களை அனுமதிப்பதில்லை. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் 12 கி.மீ., தூரம் மட்டுமே தமிழகத்தில் உள்ளது. மீதி 26 கி.மீ., தூரம் கர்நாடக மாநிலத்தில் உள்ளது. கர்நாடகாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் 24 மணி நேரமும் வாகனங்கள் சென்றுவர அனுமதிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள 12 கி.மீ., வனப்பகுதிக்கு மட்டும் இந்த கட்டுப்பாடு உள்ளதால் இரவு முழுவதும் வாகனங்களில் செல்ல முடியாமல் பஸ் போக்குவரத்து இல்லாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறோம். தமிழக அரசு இரு மாநில மக்கள் படும் சிரமத்தை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து மேல்முறையீடு செய்து இரவு நேரத்தில் குறிப்பிட்ட அளவு வாகனங்களுக்கு அனுமதி பெற வேண்டும். இதனால் பொருளாதார இழப்பு, நேரம் இழப்பு என பல இழப்புகளை விவசாயிகளும் பொதுமக்களும் சந்தித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி