பிரச்னைகளுக்கு தீர்வு காண விவசாயிகள் வலியுறுத்தல்
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வட்டார விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வலியுறுத்தியுள்ளனர்.கிணத்துக்கடவு வட்டாரத்தில், 16 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில், விவசாயம் செய்யப்படுகிறது. இதில், அதிகளவு தென்னை விவசாயம் உள்ளது. தென்னையில் நோய் தாக்குதல் ஏற்படும் போது, சில விவசாயிகள் நோய் தாக்கிய மரத்தை வெட்டி அகற்றம் செய்கின்றனர். இதற்கு ஒரு மரத்திற்கு ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படுகிறது.ஆனால், இந்த நிவாரண தொகை குறைவாக உள்ளது என விவசாயிகள் பலர் கருதுகின்றனர். எனவே, அரசு தென்னைக்கு வழங்கும் நிவாரண தொகையை உயர்த்தி தர வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.இதே போன்று, கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியான கோதவாடி, குருநல்லிபாளையம், நல்லட்டிபாளையம், செட்டியக்காபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டுபன்றிகள் தொல்லையால் விவசாயிகள் பலர் கிழங்கு வகை பயிர்களை, பயிரிடுவதை தவிர்த்து வருகின்றனர்.காட்டு பன்றிகளை சுட்டு வீழ்த்துவது குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன், கோதவாடி கிராமத்தில் நடந்தது. அதன்பின் காட்டுப்பன்றிகள் கட்டுப்படுத்துவது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. இதனால், விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.விவசாயிகளின் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.