அதிகாரிகள் பெயரில் போலி கையெழுத்து; பெண் இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்
கோவை; கோவை மாநகராட்சியில், உதவி கமிஷனர் மற்றும் உதவி நகரமைப்பு அலுவலர் பெயர்களில், போலியாக கையெழுத்திட்டு, அங்கீகாரமற்ற மனைப்பிரிவுக்கு வரன்முறை சான்றிதழ் வழங்கிய, நகரமைப்பு பிரிவு இளநிலை உதவியாளர் சந்தியா, நேற்று 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில், நகரமைப்பு பிரிவில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் சந்தியா என்பவர், அங்கீகாரமற்ற மனைப்பிரிவை வரன்முறை செய்து, விண்ணப்பதாரர் ஒருவருக்கு சான்று வழங்கியுள்ளார். அச்சான்றிதழில், கிழக்கு மண்டல உதவி கமிஷனர் முத்துசாமி மற்றும் உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி ஆகியோரது கையெழுத்துகள், போலியாக போடப்பட்டு உள்ளன.போலி கையெழுத்துகளுடன் தயாரித்த, வரன்முறை சான்றிதழை ஆதாரமாகக் கொண்டு, உள்ளூர் திட்ட குழுமத்திலும், மாநகராட்சியிலும் கட்டட வரைபட அனுமதி பெறப்பட்டிருக்கிறது. இதற்கான ஆவணங்களை மாநகராட்சியில் ஆய்வு செய்தபோது, போலியான சான்றிதழ் இணைத்திருப்பது கண்டறியப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக, நேற்றைய நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இப்பிரச்னை தொடர்பாக, காங்கிரஸ் கவுன்சில் குழு தலைவர் அழகு ஜெயபாலன், நேற்று நடந்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், கேள்வி எழுப்பினார். அதற்கு நிர்வாகம் தரப்பில் பதிலளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, மன்றத்தில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டுமென, அவர் மீண்டும் முறையிட்டார். இருப்பினும், அதுதொடர்பாக பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.சம்பந்தப்பட்ட கோப்புகளை ஆய்வு செய்த, கிழக்கு மண்டல உதவி கமிஷனர் முத்துசாமி, மாநகராட்சி கமிஷனரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். இதைத்தொடர்ந்து, இளநிலை உதவியாளர் சந்தியாவை, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.