உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மூன்று ஆண்டுகளில் ரூ.60 லட்சத்திற்கு உரங்கள் விற்பனை

மூன்று ஆண்டுகளில் ரூ.60 லட்சத்திற்கு உரங்கள் விற்பனை

மேட்டுப்பாளையம்; காரமடை, சிறுமுகை பகுதியில் அரங்கநாதர் உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனம், கடந்த மூன்று ஆண்டுகளில், 60 லட்சம் ரூபாய்க்கு உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை விற்பனை செய்துள்ளது.காரமடையில் ஸ்ரீ அரங்கநாதர் உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்படுகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிறுவனத்தின் ஆண்டு பொது குழு கூட்டம், மேட்டுப்பாளையத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அரங்கநாதர் உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். இயக்குனர்கள் நந்தகுமார், மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயக்குனர் ரங்கநாதன் வரவேற்றார்.கோவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆனந்தகுமார், வேளாண் துணை இயக்குனர் மீனாம்பிகை, அரங்கம் அங்கக வேளாண் விவசாயிகள் நிறுவன நிர்வாகி ரங்கசாமி ஆகியோர் பேசினர்.நிறுவன தலைவர் முத்துசாமி பேசியதாவது: அரங்கநாதர் நிறுவனத்தின் சார்பில், விவசாயிகள் உற்பத்தி செய்தும், தயாரித்துக் கொடுக்கும் விவசாய விளை பொருட்களை, மதிப்பு கூட்டி விற்பனை செய்யப்படுகிறது. நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகளுக்கும், கடந்த மூன்று ஆண்டுகளில், 60 லட்சம் ரூபாய்க்கு உரங்கள், பூச்சி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளிடம் நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்து, 40 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தென்னை, வாழை, கறிவேப்பிலை ஆகியவற்றின் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்புக்கு தேவையான உபகரணங்கள், 15.22 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதை இயக்க தேவையான கட்டுமானம் மற்றும் மின் இணைப்புகள், 20 லட்சம் ரூபாய் செலவில் தனியார் பங்களிப்புடன் அமைத்து, தற்போது உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் சார்பில் வேளாண் கருவிகள், விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.அரங்கநாதர் உழவர்கள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர்கள், 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். தலைமை செயல் அலுவலர் ராஜு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ