விவசாயிகளின் வங்கி கணக்கில் உர மானியம்
அன்னுார்; அன்னுார் வேளாண் விரிவாக்க மையத்தில், விவசாயிகளுக்கு உள் மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்பு நடந்தது. வேளாண் அலுவலர் சுகன்யா வரவேற்றார். வேளாண் அறிவியல் நிலைய தலைவர் (பொறுப்பு) சுரேஷ்குமார் பேசுகையில், ஒரு மூட்டை யூரியா விவசாயிகளுக்கு 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் அதனுடைய உற்பத்தி விலை 900 ரூபாய். அரசு 600 ரூபாய் மானியம் தொழிற்சாலைகளுக்கு வழங்குகிறது. வருங்காலத்தில் உரம், இடுபொருள் என அனைத்து மானியமும் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. விவசாயியின் நிலத்தின் மண் பரிசோதிக்கப்பட்டு அந்த மண்வள அட்டையில் தெரிவிக்கப்பட்டுள்ள உரம், பூச்சிக்கொல்லி மருந்து மட்டுமே தரப்படும். கத்திரி உள்ளிட்ட காய்கறி பயிர்களுக்கு ஒட்டுண்ணி கட்டுவதால் புழுக்களை முட்டை பருவத்திலேயே அழிக்கலாம். நோய் பாதிப்பு குறையும். அதிக விளைச்சல் கிடைக்கும், என்றார். பயிற்சி வகுப்பில், வேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) நிர்மலா, தொழில்நுட்ப மேலாளர் லோகநாயகி, உதவி மேலாளர்கள் பிரபு, முனுசாமி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.