வரி ஏய்ப்பு செய்த கட்டடங்களில் கள ஆய்வு! 270 நிறுவனங்களில் ரூ.77 லட்சம் வசூல்
பொள்ளாச்சி; ''பொள்ளாச்சி வரி ஏய்ப்பு செய்த வணிக வளாக கட்டடங்கள் கண்டறியப்பட்டு, முறைப்படுத்தப்பட்டு இதுவரை, 76 லட்சத்து, 96 ஆயிரத்து, 52 ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளது,'' என நகராட்சி கமிஷனர் கணேசன் தெரிவித்தார்.பொள்ளாச்சி நகராட்சியில், பல்வேறு பகுதிகளில் கட்டடங்களுக்கு வரி விதிப்பு செய்யாமலும், குடியிருப்பு வரி செலுத்திக் கொண்டு வணிக செயல்பாடுகள் செய்து கொண்டும், பெரிய கட்டடங்கள் இருந்த போதிலும் குறைந்த அளவே வரி செலுத்தியும் சிலர் நகராட்சிக்கு தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்து வருகின்றனர்.இவர்கள் அனைவரும், தாங்களாகவே முன்வந்து முழுமையான மற்றும் முறையான வரியை விதித்துக்கொள்ள, கால அவகாசம் அளிக்கப்பட்டது.இந்நிலையில், நகராட்சியில் வரி ஏய்ப்பு செய்தவர்களை கண்டறிய கள ஆய்வுப்பணியில் நகராட்சி கமிஷனர் கணேசன் மற்றும் வருவாய் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.அதில், நேற்று நியூஸ்கீம் ரோட்டில் உள்ள எலக்ட்ரானிக் ேஷாரூமில் நகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார். அப்போது, வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறி, 24 மணி நேரத்துக்குள் நகராட்சியில் உரிய தகவல்களை சமர்பிக்க வேண்டும்,' என கடைக்காரர்களிடம் கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.நகராட்சி கமிஷனர் கூறியதாவது:பொள்ளாச்சி நகராட்சி பகுதியில், 4,384 கட்டடங்கள் உள்ளன. அதில், வரி முறையாக செலுத்தப்படுகிறதா என்றும், வரி முறைப்படுத்தவும் கள ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.வரி ஏய்ப்பை தடுக்கும் வகையில், நகரில் உள்ள கட்டடங்களின் ஜி.எஸ்.டி., மற்றும் மின்கட்டணம் குறித்த பட்டியல் உள்ளது. அதைக்கொண்டு வீட்டு வரி செலுத்தி வணிக பயன்பாட்டுக்கு கட்டடம் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்யப்படுகிறது.கடந்த, மூன்று மாதங்களில், 270 குடியிருப்புகள் வணிக கட்டடமாக செயல்பட்டது கண்டறிந்து, முறைப்படுத்தப்பட்டு, 76 லட்சத்து, 96 ஆயிரத்து, 52 ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளது.இதுவரை, 80 சதவீதம் வரி முறைப்படுத்தி வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிப்பு பணிகளும், கள ஆய்வும் மேற்கொள்ளப்படுகின்றன.அதில், நியூஸ்கீம் ரோட்டில் உள்ள ேஷாரூமில், மூவாயிரம் சதுரஅடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்து, இரண்டு லட்சத்துக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களிடம், முறையாக ஆவணங்களுடன் நகராட்சிக்கு வந்து வரியை முறைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.தீயணைப்பு கருவி, பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.வரி ஏய்ப்பு செய்து, முறைப்படுத்தாமல் உள்ள, 20 சதவீதம் பேர் தாங்களாகவே முன்வந்து முறைப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை, ஜி.எஸ்.டி., அலுவலகத்தில் தெரிவித்து ஜி.எஸ்.டி., எண் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்ட நடவடிக்கைகளை தவிர்க்க வரி ஏய்ப்பு செய்வோர் முன்வந்து முறைப்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, கமிஷனர் கூறினார்.