சீறிப்பாயும் காளைகளுடன் மீண்டும் மல்லுக்கட்டு: வரும் 27ம் தேதி நடக்குது ஜல்லிக்கட்டு
போத்தனூர்: கோவையில், இரண்டாண்டுகள் இடைவெளிக்கு பின் வரும், 27ல் ஜல்லிக்கட்டு நடத்த பணிகள் நடக்கின்றன.அ.தி.மு.க., ஆட்சியில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. தேர்தலுக்கு பின் ஒருமுறை மட்டுமே மாவட்ட நிர்வாகம், ஜல்லிக்கட்டு சங்கத்துடன் இணைந்து, போட்டியை நடத்தியது. கோவையில் பொழுதுபோக்கு இடங்கள் அதிகம் இல்லாத நிலையில், 'டிவி'-யில் மட்டுமே கண்டு ரசித்த ஜல்லிக்கட்டு போட்டியை, நேரடியாக கண்டதால் மக்களிடையே, நல்ல வரவேற்பு இருந்தது.ஆனால் ஏனோ கடந்த இரண்டாண்டுகளாக, ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. மாறாக, பா.ஜ., சார்பில், மோடி ரேக்ளா பந்தயம் இருமுறை நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு கொடுத்த அதே வரவேற்பு இதற்கும் கிடைத்தது.இந்நிலையில், இவ்வாண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகம், ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து மேற்கொண்டு வருகிறது.எல் அண்ட் டி பை-பாஸ் சாலையில், ஜல்லிக்கட்டு நடந்த அதே இடத்தில்தான் இம்முறையும் போட்டி நடக்கிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, பார்வையாளர்கள் அமர்வதற்கான காலரி அமைக்கும் பணி நடந்து வருகிறது.தொடர்ந்து வாடிவாசல் தடுப்பு, களம் காணுமிடம், வெளியேறுமிடம் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.வரும், 27ல் நடக்கும் ஜல்லிக்கட்டை காண... மக்களே தயாராக இருங்கள்!