வனப்பகுதியில் 70 கி.மீ., துாரத்துக்கு தீத்தடுப்பு கோடுகள்
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக பகுதியில் தீ விபத்துகள் ஏற்படுவதை தடுக்க, 70 கி.மீ., துாரத்துக்கு தீத்தடுப்பு கோடுகளை வனத்துறையினர் அமைத்துள்ளனர்.தற்போது, கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால், வனச்சரக பகுதிகளில் உள்ள குளம், குட்டைகள், சிற்றோடைகள் நீரின்றி வறண்டு போய் உள்ளது. புற்கள், சிறு செடிகள், மரங்கள் ஆகியவையும் போதுமான தண்ணீர் இன்றி காய்ந்து கிடக்கின்றன. வனப்பகுதிகளில் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ தீ விபத்துகள் ஏற்படாமல் தடுக்க, வனத்துறையினர் தீத்தடுப்பு கோடுகளை அமைத்து வருகின்றனர். இதற்காக வனப்பகுதியின் எல்லையைத் தாண்டி, உள்பகுதியில் உள்ள வனத்தில், 30 முதல், 50 அடி அகலத்துக்கு அங்குள்ள புற்கள், சிறு தாவரங்கள், சருகுகள், சுள்ளிகள் போன்றவற்றை வெட்டி, அகற்றி அல்லது ஒரு பாதை போல வனப்பகுதியின் முக்கிய இடங்களில் பல கி.மீ., துாரத்துக்கு வெற்று தரையை உருவாக்குவர். இதுவே தீத்தடுப்பு கோடுகள் எனப்படுகின்றன. காட்டின் எல்லை பகுதியிலிருந்து மனிதர்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ தீ உருவானால், உள்காட்டுக்கோ அல்லது தீத்தடுப்பு கோட்டை தாண்டி உள்ளே வர இயலாது. இதனால் வனத்தில் தீ பற்றி அரிய வகை மரங்கள், செடி கொடிகள் அழிந்து சாம்பலாவது தடுக்கப்படுகிறது.இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சரவணன் கூறுகையில்,பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் கோபனாரி முதல் ஆனைகட்டி வரை உள்ள வனப் பகுதியில், 70 கி.மீ., தூரத்துக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள தீத்தடுப்பு கோடுகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. வனவிலங்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்றார்.