உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆன்லைனில் பட்டாசு... மக்கள் ஆர்வம்! கடை வியாபாரத்துக்கு வந்தது வேட்டு

ஆன்லைனில் பட்டாசு... மக்கள் ஆர்வம்! கடை வியாபாரத்துக்கு வந்தது வேட்டு

சுற்றுச்சூழல், மாசு இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, பட்டாசு வெடிக்க பல கட்டுப்பாடுகள் வந்தாலும், தீபாவளிக்கு ஒரு நாள் முன் துவங்கி, விடுமுறை முடியும் வரை பட்டாசு வெடிக்கும் பழக்கம், இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.கோவை மாநகரில் 431 பட்டாசுகள் கடைகளுக்கு, மாநகர போலீசார் அனுமதி அளித்துள்ளனர். ஒரு பட்டாசு கடை அமைப்பது, ஒரு பிள்ளையை பெற்று எடுப்பதற்கு சமம் என, பட்டாசு கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.பட்டாசு கடைக்கு அனுமதி, கையூட்டல் என அலைச்சல், செலவுகள் மிகவும் அதிகம். இவ்வளவு கஷ்டப்பட்டு கடை அமைப்பதற்கு எதற்கு, சிறிது பணம் பார்ப்பதற்கு தானே.அந்த வருமானத்திற்கும் 'வேட்டு' வைக்கும் வகையில், தற்போது ஆன்லைன் விற்பனையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வருந்துகின்றனர்.மற்றொரு புறம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு, ஆன்லைனில் பட்டாசு வாங்கும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிப்பாளர்கள், வணிகர்கள் நேரடியாக சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரம் செய்து, வாடிக்கையாளர்களை கவர்கின்றனர். நேரடியாக ஆர்டர் செய்வதால், பட்டாசு வகைகள் குறைந்த விலையில் கிடைப்பதே காரணம்.பட்டாசு வியாபாரி ரத்தீஷ் என்பவர் கூறுகையில், 'விலை குறைவாக கிடைக்கிறது என, பலர் ஆன்லைனில் பட்டாசு ஆர்டர் செய்வதால் எங்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வாங்கும் பட்டாசு விலை குறைவாக இருப்பது போல், தரமும் குறைவாக இருக்கும். நீங்கள் ஆர்டர் செய்யும் பட்டாசுக்கு பதில், வேறு பட்டாசு வரவும் வாய்ப்புள்ளது,'' என்றார்.அத்துடன் நிற்காமல், ''பெரிய பெரிய நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்ட பட்டாசுகளை, ஆன்லைனில் விற்பதாகவும் தகவல்கள் வருகின்றன,'' என போட்டார் ஒரு 'குண்டு!'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ