உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.எஸ்.பி.பி., மில்லினியம் பள்ளிக்கு முதல் பரிசு! தினமலர் பட்டம் வினாடி - வினா இறுதிப்போட்டியில் சாதனை

பி.எஸ்.பி.பி., மில்லினியம் பள்ளிக்கு முதல் பரிசு! தினமலர் பட்டம் வினாடி - வினா இறுதிப்போட்டியில் சாதனை

கோவை; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்'இதழ் சார்பில், கோவையில் நேற்று நடந்த, 'பதில் சொல்; பரிசை வெல்' வினாடி-வினா இறுதிப் போட்டியில், பி.எஸ்.பி.பி., மில்லினியம் பள்ளி முதல் பரிசு வென்றது.பள்ளி மாணவர்களிடம் கணிதம், அறிவியல் ஆய்வுத் திறன், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. பட்டம் வாசிக்கும் மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தும் விதமாக, 2018 முதல் 'வினாடி--வினா' போட்டி நடத்தப்படுகிறது.2024-25ம் ஆண்டுக்கான வினாடி-வினா விருது போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் சார்பில், கடந்தாண்டு அக்., 8ம் தேதி முதல் நடந்து வந்தது.இவர்களுடன், 'கோ-ஸ்பான்சர் ஆக, சத்யா ஏஜென்சிஸ் இருந்தது. இதில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு முதற்கட்ட பொது அறிவுத்தேர்வு நடத்தப்பட்டது.ஒவ்வொரு பள்ளியிலும், முதலிடம் பிடித்த தலா இருவர் அடங்கிய அணி, அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கோவை, சிங்காநல்லுார் - வெள்ளலுார் ரோட்டில் உள்ள எஸ்.எஸ்.வி.எம்., வேர்ல்டு பள்ளியில், நேற்று அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி நடந்தது.காலை, 9:00 மணிக்கு, 150 பள்ளிகளை சேர்ந்த தலா இரண்டு மாணவர்கள் அடங்கிய குழுக்களுக்கு, 20 கேள்விகள், 20 நிமிடங்கள் என்ற அடிப்படையில் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதில், அதிக மதிப்பெண் பெற்ற, முதல் எட்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.

ஐந்து சுற்று போட்டி

'குவிஸ் மாஸ்டர்' அரவிந்த், 'மாத்தி யோசி', 'வாய்ப்புகள் மூன்று', 'உன் வாய்ப்பு உன் கையில்', 'விட்டா போச்சு', 'பட்டம் -வேகம் விவேகம்' என, ஐந்து சுற்றுக்களாக வினாடி-வினா போட்டியை நடத்தினார்.ஆரம்பம் முதலே மாணவர் குழுவினர், போட்டி போட்டு பதிலளித்து அசத்தினர். மறுபுறம் வாய்ப்பு கிடைத்த பார்வையாளர்களும், சரியான பதில்களை அளித்து பரிசுகளை தட்டினர்.துவக்கம் முதலே அசத்தலான பதிலளித்து புள்ளிகளை குவித்த கோவை 'தி பி.எஸ்.பி.பி., மில்லினியம் பள்ளி' மாணவர்கள் அபிஷேக், சக்திவேல் ஆகியோர் முதல் பரிசை தட்டினர்.ஒத்தக்கால் மண்டபம் டாக்டர் வி. கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியர் மேனகா ஸ்ருதி, கெய்ட்லின் லிட்வினா இரண்டாம் பரிசையும், காரமடை வித்யா விகாஸ் பள்ளி சர்வதேச பள்ளி மாணவர்கள் ராகவ், சாத்விக் ஆகியோர் மூன்றாம் பரிசையும் வென்றனர்.ஈச்சனாரி ஆரிசன் அகாடமி ஆதித்யா, உதயசங்கர் குழு நான்காம் இடமும், திருப்பூர் கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி அக் ஷயா, கிரித்திக் குழு ஐந்தாம் இடமும், திருப்பூர் யுனிவர்சல் மெட்ரிக் பள்ளி ப்ரிசா, வேதிகா குழு ஆறாம் இடமும், கிணத்துக்கடவு விவேக் வித்யா மந்திர் சன்மதி, மித்ரா குழுவினர் ஏழாம் இடமும், பொள்ளாச்சி ஸ்ரீ லதாங்கி வித்யா மந்திர் பள்ளி ஹாசினி, வர்ஷா ஆகியோர் எட்டாம் இடமும் பிடித்தனர்.

பதிலும்...பரிசும்!

வினாடி-வினா போட்டியில் முதல் பரிசாக, ஆப்பிள் மேக் புக் புரோ மற்றும் டிராபி, இரண்டாம் பரிசாக லேப்டாப், மூன்றாம் பரிசாக ஸ்மார்ட் டேப் மற்றும் கோப்பைகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கினார்; சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி டீன் நீதி உடனிருந்தார்.நான்கு முதல் எட்டாம் இடம் பிடித்த அணிகளுக்கு, ஸ்மார்ட் வாட்ச் பரிசாக வழங்கப்பட்டது. நான்கு மற்றும் ஐந்தாம் பரிசுகளை எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மற்றும் அறங்காவலர் மோகன்தாஸ் வழங்கினர்.சம்பூர்ணம் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பொது மேலாளர் செந்தில்குமார் ஆறு மற்றும் ஏழாம் பரிசுகளையும், டோம்ஸ் பைன்டெக் பகுதி விற்பனை மேலாளர் அசோக்குமார் எட்டாம் பரிசையும் வழங்கினார். தவிர, அரையிறுதியில் அதிக மதிப்பெண் பெற்ற, 25 அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை